கிருமி

29/03/2008

சிங்கப்பூரில் சிதம்பரம்

Filed under: அரசியல் — கிருமி @ 10:04 பிப

சிங்கப்பூரில் மார்ச் 26 இல் ப.சிதம்பரம் நிக‌ழ்த்திய ஒரு உரை :

சர்வதேச அளவிலான விலைவாசி உயர்வுக்கு வளரும் நாடுகளின் குறிப்பாக அமெரிக்காவின் தவறான அணுகுமுறையே காரணம்.

அமெரிக்காவில் தயாராகும் சோளத்தில் 20 சதவீதம் வரை உயிரி எரிபொருள் தயாரிப்புக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. உணவு தானியத்தை எரிபொருளாக மாற்றும் முட்டாள்தனமான நடவடிக்கையை ஒரு மிகப் பெரிய நாடு செய்வதை எப்படி ஏற்க முடியும்?.

வீட்டுக் கடனைத் திரும்ப வசூலிக்காததால், அமெரிக்க வங்கிகள் திவாலாகும் சூழல் ஏற்பட்டு “சப் பிரைம்’ நெருக்கடி ஏற்படக் காரணமானது. இது அனைத்து நாடுகளின் பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது என்றும் சிதம்பரம் கூறினார். வீட்டுக் கடனை வசூலிக்க அமெரிக்காவில் சட்டம் வலுவாக இல்லை என்பதையே காட்டுகிறது. வளரும் நாடுகளில் இந்த நிலை ஏற்பட்டிருந்தால் அந்நாடு திவாலாகியிருக்கும்.

வளர்ந்த நாடு இத்தகைய தவறை செய்ததால், அதுபற்றி நாம் விவாதிக்கவே தயங்குகிறோம். கேழ்வரகு, கோதுமை உள்ளிட்ட பொருள்களின் விலை கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.

மேலும் பெட்ரோலியப் பொருள்களின் விலையேற்றம் பிற பொருள்களின் விலை உயர்வுக்குக் காரணமாக அமைந்து விட்டது.

நூறாயிரமாவது ஆண்டில் (மில்லினியம் கோல்) எட்ட வேண்டிய இலக்கு குறித்து எவரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. வறுமையை முற்றிலுமாக ஒழிக்கவேண்டும் என்ற இலக்கு எட்ட போதிய நடவடிக்கைகளை எந்த நாடும் எடுக்கவில்லை.

சர்வதேச பொருளாதாரத்தில் தேக்க நிலை தோன்றுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இதனால் பல நாடுகளின் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் ஏற்பட்ட தேக்க நிலை, பணவீக்கம் ஆகியன வளர்ச்சியடையும் நாடுகளின் பொருளாதாரத்தை வெகுவாகப் பாதிக்கும் காரணிகளாகும்.

இதைக் கருத்தில் கொண்டு உள்நாட்டில் பொருள்களுக்கான தேவையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் உள்நாடு மற்றும் அன்னிய முதலீட்டை ஊக்குவிக்க பங்குச் சந்தையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தியாவில் வலுவான பொருளாதாரத்தை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சிதம்பரம் கூறினார்.

கொஞ்சம் யோசியுங்கள்…..

இன்று நமக்குத் தேவை கட்டுபடியாகிற விலையில் பொருட்கள் அவ்வளவு தான், காரணங்கள் அல்ல. பள்ளிக்கு தாமதமாக வரும் மாணவன் ஆசிரியரிடம் ஏதேதோ சாக்குப் போக்கு சொல்வது போல் தான் நமது அரசியல்வாதிகள் பேசுகிறார்களே தவிர, உருப்படியாக எதுவும் செய்வதில்லை.

அமெரிக்காவில் விளையும் மக்காச்சோளத்தில் 20% அல்லது 90% சதவீதம் எரிபொருள் உற்பத்திக்கு பயன்படுத்துவது அமெரிக்காவின் இஷ்டம். தான் வைத்ததே சட்டம் என்று எல்லா விஷயங்களிலும் நடந்து கொள்ளும் அமெரிக்காவுக்கு புத்திமதி சொல்வதா நம் வேலை.

விவசாயத்தை முதுகெலும்பாகக் கொண்ட நாடுதானே நாம்…. நமக்குத் தேவை சோளம் எனில் நாமே விளைவித்துக் கொள்ளலாமே? ஏன் அமெரிக்காவையோ மற்ற நாடுகளையோ சார்ந்திருக்க வேண்டும். தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டுவதேன்? அவர்களின் பொருளாதாரம் சரியில்லை எனில் அது அவர்களின் பிரச்சினை. அதற்காக நாம் ஏன் அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்க வேண்டியிருக்கிறது? இந்த விலைவாசி உயர்வுக்குக் காரணாம் உலக மயமாக்கல், தாராள மயமாக்கல் எனில் அப்படிப்பட்ட ஒரு மயமாக்கலில் நாம் ஐக்கியமாக வேண்டியதன் அவசியம் என்ன?

முழுதும் அன்னிய நாடுகளைச் சார்ந்தே நமது இன்றைய பொருளாதாரம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

சுதந்திரம் அடைந்ததிலிருந்து ஒரு கோஷம் தீனமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது பாரதத்தில்…. உணவு உற்பத்தியில் தன்னிறைவு என்று…..

கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் தெரியும் நாம் எல்லாவற்றுக்கும் எப்படி மற்ற நாடுகளிடம் கையேந்திக் கொண்டு நிற்கிறோம் என்று.

விவசாயத்தையே உயிராகக் கொண்ட நமது நாட்டின் நிலைமையைக் கொஞ்சம் பாருங்கள்

அரிசி எப்போதும் பற்றாக்குறைதான். கோதுமை, எண்ணெய் பற்றி சொல்லவே தேவையில்லை லட்சக்கணக்கான டன்கள் இறக்குமதி செய்தும் பஞ்சப்பாட்டு தான்.

விதைகளும் உரங்களும் கூட இறக்குமதி செய்யப்படுகின்றன. இதை விட வேறெதுவும் கேவலம் இருக்க முடியுமா என்ன? பெரும்பாலான‌ இற‌க்கும‌தி விதைகள் மகசூல் கொடுத்தாலும் விளையும் பொருட்களை விதையாக‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌ முடியாது. அவ‌ற்றை விதைத்தாலும் முளைக்காது. நெல் விதையை வாங்கி விதைத்து விளைச்ச‌ல் எடுத்தாலும் விளைந்த‌ நெல்லை விதைத்தால் முளைக்காது. உயிரிய‌ல் தொழில் நுட்ப‌த்தில் அதையெல்லாம் க‌ட்டுப்ப‌டுத்தி விட்டார்க‌ள். மீண்டும் வாங்கிய‌ இட‌த்தில் விதை நெல் வாங்க‌ வேண்டும், அல்லது வேறு வழியைப் பார்க்க வேண்டும். போதாக்குறைக்கு இவற்றையெல்லாம் உபயோகித்தால் நிலமே பாழாகிவிடும் அபாயம் வேறு.

கணிப்பொறித் துறையில் நம்மவர்கள் கொடிகட்டிப் பறக்கிறார்களாம். கணிப்பொறிக்கான சர்க்யூட்டுகள் வடிவமைப்பானது (சர்க்யூட் டிசைனிங்) இந்தியாவிலேயே மிகப் பெருமளவு நடைபெறுகிறது என்று சொல்லப்படுகிறது. ஆனால் இங்கு கணிப்பொறி தயாரிக்கப்படுவதில்லை. ஒரு சில பொருட்களைத் தவிர கிட்டத்தட்ட அனைத்து கணினி பாகங்களும் இறக்குமதி ஆகின்றன. அல்ல‌து இற‌க்கும‌தியான‌ பாக‌ங்க‌ள் இங்கு ஒருங்கிணைக்க‌ப்ப‌ட்டு விற்க‌ப்ப‌டுகின்ற‌ன‌, அவ்வ‌ள‌வே.

கணினித் துறையில் சிறந்து விளங்கும் நம் மென்பொருள் ஜாம்பவான்கள் இது வரை மைக்ரோசாப்டின் விண்டோஸுக்கு மாற்றாக ஏதேனும் ஒரு ஆபரேட்டிங் சிஸ்டத்தை உருவாக்கி இருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. அதற்குரிய முயற்சிகள் கூட பெரிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை. மைக்ரோசாப்டுக்கு மென்பொருளுக்கான லைசென்ஸ் பணம் மட்டும் பல்லாயிரக்கணக்கான கோடிகள் அளவில் ஆண்டுதோறும் பட்டுவாடா செய்யப்படுகிறது. (திடீரென மைக்ரோசாப்ட் திவாலாகி சேவைகள் நிறுத்தப்பட்டால் தெரியும் சேதி) மைக்ரோசாப்ட், ஏற்P, SஆP ஆகியவை தான் இங்கு கோலோச்சுகின்றன‌. வேறெந்த‌ புதிய‌ மென்பொருளையும் எழுதி ப‌ரிசோதித்துப் பார்க்க‌ ந‌ம்ம‌வ‌ர்க‌ளுக்குத் துப்பில்லை. ஆனால் ஏற்றும‌திக்கு ம‌ட்டும் ட‌ன் க‌ண‌க்கில் மென்பொருள் தயார் செய்வார்க‌ள் இவ‌ர்க‌ள்.

இந்த இறக்குமதி ப‌ட்டிய‌ல் சிமெண்ட், காகிதம், மின்னணு பொருட்கள், மருந்து பொருட்கள், ம‌ருத்துவ‌ உப‌க‌ர‌ணங்கள், அனைத்து வகை எந்திரங்கள், ஆணுறைகள், குழ‌ந்தைக‌ளுக்கான‌ விளையாட்டுப் பொருட்க‌ள், தொலைத்தொட‌ர்பு சாத‌ன‌ங்க‌ள், ஆட‌ம்ப‌ர‌ப் பொருட்க‌ள், கார், போர் விமானங்கள், கப்பல்கள், துப்பாக்கிகள், குண்டுகள், சாராயம், வாஸ்து பொருட்கள், பெங்சுயி சாத்திரம் (இதில் வாஸ்து மீன் வேறு), மார்பிள், டைல்கள் என‌ அறுதியிட‌ முடியாத‌ அள‌வு நீள்கிற‌து.

சில‌ ஆண்டுக‌ளுக்கு முன்பே வினாய‌க‌ர் ச‌துர்த்தி பூஜைக்கென‌ ல‌ட்ச‌க்க‌ண‌க்கில் வினாய‌க‌ர் சிலைக‌ள் சீனாவிலிருந்து இற‌க்கும‌தி செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌.

ஆறேழு ஆண்டுகளுக்கு முன்பு சீன‌ப் ப‌ட்டாசுக‌ள் இங்கு இற‌க்கும‌தி செய்ய‌ப்ப‌ட்டு விற்கப்பட்டது. அப்போது இவற்றை சிவகாசிக்காரர்கள் எதிர்த்தார்கள், வியாபாரம் படுத்து விடும் என்று. சென்ற ஆண்டு சீனப் பட்டாசுகளை இற‌க்கும‌தி செய்து ஒரு சிவகாசி க‌ம்பெனி விற்ற‌து. இவ‌ர்க‌ளுக்கு எந்த‌ பிர‌ச்சினையுமில்லை. இன்று ப‌ட்டாசு த‌யாரிப்பாளர்க‌ள், நாளைய‌ இற‌க்கும‌தி ம‌ற்றும் விற்ப‌னை த‌ர‌க‌ர்க‌ளாக‌ செய‌ல்ப‌டுவார்க‌ள். கால‌த்திற்கேற்ப‌ மாறிக் கொள்வார்க‌ள். ஆனால் தொழிலாள‌ர்க‌ளின் க‌தி?

எதற்கும் அயல் நாட்டு பொருட்களுடன் நம் பொருட்களின் விலையையும் தரத்தையும் ஒப்பிட்டு பார்த்து வாங்கும் போக்கு அதிகரித்து விட்டதே இதற்கு காரணம். சீனன் ஒரு பொருளை பாதி விலைக்கு கொடுக்கிறான் என்றால் அதற்கு பல காரணங்கள் இருக்கும். மிகக் குறைந்த மின்சார விலை, தொழிலாளர் சம்பளம் குறைவு, கட்டுப்படுத்தப்பட்ட பொருளாதாரம் போன்ற பலவிதமான காரணங்கள் இருக்கும்.

இங்கு பொருட்க‌ளை வாங்கும் போது கூட‌ அதில் ஒரு சீட்டு ஒட்டியிருக்கும், “எக்ஸ்போர்ட் குவாலிட்டி” என்று. அதாவ‌து, வெளி நாடுக‌ளுக்கு அனுப்ப‌ப்ப‌டும் அள‌வு தரமானதாம் அப்பொருள். எனில், இங்கு விற்க‌ப்ப‌டும் சாதார‌ண‌ பொருள் என்றால், இந்திய‌னுக்காக த‌யாரிக்க‌ப்ப‌ட்ட‌து என்றால்
– அவ்வ‌ள‌வு கேவ‌ல‌மா?

ரொம்ப கொடுமை என்னவென்றால் ராணுவ தளவாடங்கள் பெருமளவு இறக்குமதி செய்யப்படுகின்றன. இதில் ஊழல் வேறு நடக்கிறது. ஹெலிகாப்டர்கள், போர்க்கப்பல்கள் போன்றவை கூட அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்தும், தகவல் பரிமாற்ற தொழில் நுட்பம் இஸ்ரேலிடமிருந்தும் இறக்குமதி செய்யப்படுகின்றன. இவர்கள் எல்லாம் எப்படிப்பட்ட எம்டன்கள் என்று உலகுக்கே தெரியும். நமது பாதுகாப்பு ரகசியங்கள் அந்த கருவிகள் மூலம் நேரடியாக அவர்களையே சென்றடையும் வசதியை அவர்கள் அதிலேயே பொருத்த வாய்ப்பிருப்பதை மறுக்க முடியுமா? அமெரிக்காவிலிருந்து இற‌க்கும‌தி செய்ய‌ப்ப‌ட்ட‌ எத்த‌னை ராணுவ‌ ஹெலிகாப்ட‌ர்க‌ள் விபத்துக்குள்ளாகியுள்ள‌ன‌, எத்த‌னை ராணுவ‌ அதிகாரிக‌ள் ப‌லியாகியுள்ள‌ன‌ர் என்ப‌தெல்லாம் வெளிச்ச‌த்துக்கு வ‌ராத‌ விஷய‌ங்க‌ள். இது போன்ற சம்பவங்களின் பின்னணியில் ஏதேனும் ச‌தி இருந்த‌தா, கோளாறுக‌ள் த‌ற்செய‌லாக‌ ஏற்ப‌ட்ட‌வையா அல்ல‌து த‌யாரிப்பிலேயே ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌வையா என்ப‌தெல்லாம் புல‌னாய்வு செய்ய‌ப்ப‌ட்ட‌னவா என்றால் அதுவும் இல்லை.

ராணுவ‌ த‌க‌வ‌ல் தொழில் நுட்ப‌ உத‌விக்காக‌ இப்போது இஸ்ரேலிட‌ம் உற‌வாடுகிறது ந‌ம் தேச‌ம். அமெரிக்க‌ இஸ்ரேலிய உறவின் பின்புலமும் அந்த உறவின் பலமும் உல‌க‌றிந்த‌ விஷ‌ய‌ம்.

எல்லாவற்றையும் வெளி நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்து கொண்டிருந்தால்…. இங்கு விலைவாசி, வேலையில்லாத் திண்டாட்டம், அதன் பின்விளைவுகளான கொலை, கொள்ளை, சூது, முதலாளித்துவம் ஆகியவை அதிகரித்து விட்டமையே இதற்கு சாட்சி.

ஆன்லைனில் எண்ணெய், பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களும் தங்கம், வெள்ளி, இரும்பு போன்றவையும் விற்று வாங்கப்பட்டு சூதாடப்படுகின்றன. பெரும் பண முதலைகளும் அரசியல்வாதிகளும் இதில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். விளைவு? நுகர் பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுள்ளது.

பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வால் அனைத்துப் பொருட்களும் விலை உயர்ந்து விட்டது என்று ப.சிதம்பரம் சொல்கிறார். நியாயமாக அரசு என்ன செய்திருக்க வேண்டும்? பெட்ரோலிய எரிபொருட்களுக்கு பதிலாக மாற்று எரிபொருள் பற்றி தொலை நோக்குடன் சிந்தித்திருக்க வேண்டும். மாற்று எரிபொருள் கண்டுபிடிக்கவும் ஏதாவது முயற்சி செய்யப்பட்டிருக்க வேண்டும். மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை ஊக்குவித்திருக்க வேண்டும். ஆனால் இவர்கள் செய்வதென்ன? கார், மோட்டார் சைக்கிள்களுக்கு வரி குறைப்பு செய்து அரசின் வருவாயையும் குறைத்து, பெட்ரோலியப் பொருட்களின் நுகர்வையும் அதிகரித்து மேலும் மேலும் சிக்கலை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். பெட்ரோலியப் பொருட்களின் நுகர்வு அதிகரிப்பதால் என்ன ஆகிறது? அரசு பெட்ரோலியப் பொருட்களுக்கு வழங்கும் மானியத்திற்காக‌ (பெட்ரோலியம் சப்சிடி) பல நூறு கோடிகள் அரசு கஜானாவிலிருந்து உறிஞ்சப்படுகின்றன. வரிக் குறைப்பில் வருவாய் இழப்பு, மானிய வகையில் கையிருப்பிலிருந்தே பெரும் இழப்பு.

இவற்றுக்கெல்லாம் ஒரே வழி, அனைத்து துறைகளிலும் தன்னிறைவை எட்டுவது ஒன்றையே லட்சியமாகக் கொண்டு செயல்படுவது தான். எதற்கும் எவரையும் எதிர்பார்க்காமல் அமைதியாக ஜப்பான் சாதித்தது போல் சாதிப்பது ஒன்றே வழி. நமது அரசியல்வாதிகள் ஹார்வ‌ர்டு ப‌ல்க‌லையில் போய் ப‌டித்து விட்டு இங்கு வ‌ந்து மில்லிய‌ன், பில்லிய‌ன், டால‌ர், சென்செக்ஸ், குளோப‌ல் எகானமி, ச‌ப் பிரைம் கிரைசிஸ், புல் பிய‌ர் என்றெல்லாம் பீலா விட்டுக் கொண்டிருந்தால் ஆப்பிரிக்க நாடுகள் போல பெரிய அளவில் உள் நாட்டு பிரச்சினைகளை சந்திக்க வேண்டியதிருக்கும்.

************

Advertisements

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

தமிழில் மறுமொழி இடவும். தமிழில் உரையாடுவோம், எழுதுவோம். நன்றி.

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: