கிருமி

13/05/2008

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீண்டும் அழுகை...

Filed under: நையாண்டி விலாஸ் — கிருமி @ 11:05 முப
Tags:

சில நாட்கள் முன்பு ஹர்பஜன் சிங்கிடம் அறை வாங்கி அழுத ஸ்ரீசாந்த் மீண்டும் அழுது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நேற்று போட்டி துவங்கும் முன் கிரிக்கெட் வீரர்கள் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது பக்கத்தில் இருந்த ஒரு சக வீரர் ஸ்ரீசாந்தின் தட்டில் இருந்த வடையை நைசாக திருடி விட்டதாகத் தெரிகிறது. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே சாப்பிட்டதில் ஸ்ரீசாந்துக்கு இடதுபுறம் இருந்தவர் திருடினாரா அல்லது வலதுபுறம் இருந்தவர் திருடினாரா என்று ஸ்ரீசாந்துக்கு தெரியவில்லை.

தனது வடை திருடப்பட்டதை அறிந்த ஸ்ரீசாந்த் கேன்டீனிலேயே அழ ஆரம்பித்து விட்டார். சக வீரர்கள் அவரைத் தேற்ற வேறு ஒரு வடையை கொடுத்தனர். ஆனால் திருடப்பட்ட அதே வடை வேண்டும் என்று ஸ்ரீசாந்த் தேம்பித்தேம்பி அழுதார்.

கேன்டீனிலிருந்து மைதானம் வரை அழுது கொண்டே வந்த ஸ்ரீசாந்த் தொலைக்காட்சியில் தனது முகம் தெரியும் வரை அழுதார். முதலில் பந்து வீசிய அவர் பந்தில் எச்சிலுக்கு பதில் கண்ணீரையே தோய்த்து வீசினார்…..

ஸ்ரீசாந்துக்கு குவியும் ச‌லுகைக‌ள், ஆதரவு

ஸ்ரீசாந்த் இனி போட்டிகளில் கலந்து கொள்ள‌ச் செல்லும்போதெல்லாம் அவரை ஆறுதல்படுத்த‌ அவ‌ர‌து அம்மாவும் உட‌ன் செல்ல‌ விமான‌ டிக்கெட் த‌ர‌ப்ப‌டும் என்று ஐபிஎல் நிறுவ‌ன‌ம் தெரிவித்துள்ள‌து.

புக‌ழ்பெற்ற‌ ரேம‌ண்ட்ஸ் துணி நிறுவ‌ன‌ம் ஸ்ரீசாந்துக்காக‌ அதிக‌ ஈர‌ம் உறிஞ்சும் த‌ன்மையுள்ள‌ கைக்குட்டைக‌ளை ஸ்பான்ச‌ர் செய்வ‌தாக‌ அறிவித்துள்ளது.

பிரபல பொம்மை தயாரிப்பு நிறுவனம் ஒன்று ஸ்ரீசாந்துக்கு பத்து ஆண்டுகளுக்கு தேவையான டெடி பியர் பொம்மைகளை இலவசமாய் வழங்குவதாக அறிவித்துள்ளது.

அகில உலக மலையாளிகள் சமாஜம் ஸ்ரீசாந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. உலகெங்கும் அனைத்து டீக்கடைகளையும் மூடி போராட்டம் நடத்தவிருப்பதாக மலையாள சமாஜத் தலைவர் தெரிவித்தார்.

இந்திய‌ குழந்தைத் தொழிலாள‌ர் த‌டுப்பு அமைப்பு ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்ப‌தாக‌ செய்திக‌ள் கூறுகின்ற‌ன‌.

===========

Advertisements

06/05/2008

என்ன சொல்கிறார் ப‌.சிதம்பரம்…….?

Filed under: அரசியல் — கிருமி @ 5:10 பிப
Tags: ,

06-05-2008

சில நாட்கள் முன்பு நிதியமைச்சர் (அப்படித்தான் சொல்கிறார்கள்) ப.சிதம்பரம் அமெரிக்காவின் மீது ஒரு குற்றச்சாட்டை சொல்லி இருந்தார்.

அதாகப்பட்டது….

அமெரிக்காவில் தயாராகும் சோளத்தில் 20 சதவீதம் வரை உயிரி எரிபொருள் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. உணவு தானியத்தை எரிபொருளாக மாற்றும் முட்டாள்தனமான நடவடிக்கையை ஒரு மிகப் பெரிய நாடு செய்வதை எப்படி ஏற்க முடியும்?…… இவ்வாறு அவரது அறிக்கை நீண்டது.

அமெரிக்காவில் விளையும் சோளத்தில் இருபது சதம் உயிரி எரிபொருள் என்னும் பயோ பியூல் தயாரிப்புக்கு ஒதுக்கப்படுகிறது. இதனால்தான் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பஞ்சம் வருகிறதாம், விலைவாசி உயர்கிறதாம்.

இது பற்றிய விரிவான விமர்சனம் இங்கே.

நேற்று (05-05-2008) எகனாமிக் டைம்ஸ் நாளிதளில் முதல் பக்கத்தில் வந்த ஒரு செய்தியின் சாரம்:

ம‌துத் தொழிற்சாலைக‌ளுக்கு தேவையான பெருமளவு பார்லியை பெப்சி அளிக்க‌விருக்கிற‌து.

இதற்கான முயற்சிகளை (கார்ப்பரேட் விவசாயம்) ராஜஸ்தானில் பெப்சி துவக்கி வருகிறது. 10,000 ஏக்கர்களில் விவசாயம் செய்யும் சுமார் 1200 விவசாயிகளுடன் இதற்காக பெப்சி கூட்டு வைத்துள்ளது.

இதற்கு முன் இந்த விவசாயிகள் கோதுமை உற்பத்தி செய்து கொண்டிருந்தனர். ஒரு கிலோ கோதுமைக்கு நான்கு ரூபாய் கிடைத்தது. இப்போது பார்லி ஒரு கிலோவுக்கு ஒன்பது முதல் பத்து ரூபாய் வரை கிடைக்கும்.

கிங்பிஷர் பியர் புகழ் விஜய் மல்லையாவின் யூனியன் பிரீவரீஸ் சாராய நிறுவனம் பெப்சியை அணுகி பார்லி தேவை என்று கேட்டதாலேயே பெப்சி இந்த வியாபாரத்தில் இறங்கியுள்ளது.

பல பன்னாட்டு நிறுவனங்களும் (ஹெய்ன்கென், ஃபாஸ்டர்ஸ் (ஒழுங்காக வாசிக்கவும்), கார்ல்ஸ்பெர்க்) யூனியன் பிரீவரீஸ் நிறுவனத்தை பார்லிக்காக அணுக ஆரம்பித்துள்ளன.

++++

கொடுமை. இங்கே சாராயத்துக்கான பார்லி விளைவிக்கப்பட்டு இங்கிருப்பவர்களின் குடியில் மண்ணை அள்ளைப் போட்டு விட்டு, ஏற்றுமதியும் செய்யப்படும்.

கோதுமை விளைவிப்பவனை மூளைச்சலவை செய்து சாராய உற்பத்தியை ஊக்குவிக்கிறார்கள், அதுவும் அன்னிய நிறுவனங்கள்.

அமெரிக்காக்காரன் உணவு தானியத்திலிருந்து எரிபொருள் தான் தயாரிக்கிறான். ஆனால் இங்கே நாம் உணவு உற்பத்தியிலிருந்து ஊறல் சரக்குக்கு அல்லவா மாறிக்கொண்டு இருக்கிறோம். இத‌ற்கு ஹார்வர்டு மேதாவி ப.சித‌ம்ப‌ர‌த்தின் ப‌தில் என்ன‌?

ஏற்கனவே உணவுப் பொருட்களின் விலை விண்ணை முட்டிக் கொண்டிருக்கிறது. உணவுப் பொருள் தட்டுப்பாடு, பற்றாக்குறை, ஆன்லைன் சூதாட்டம், பதுக்கல் என ஆயிரத்தெட்டு பிரச்சினைகள்.

கொஞ்சநஞ்சமல்ல, பதினெட்டு லட்சம் டன் கோதுமை 2007 ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்டது. இந்த ஆண்டும் கோதுமை இறக்குமதி செய்யப்படுகிறது. உணவு உற்பத்தியில் தன்னிறைவு இல்லை.

சமையல் எண்ணெய், பருப்பு, கோதுமை என எல்லாவற்றிலும் பற்றாக்குறை, இறக்குமதி செய்தால்தான் இங்கே நாம் சாப்பிட முடியும் என்ற நிலை நிலவுகிறது.

இதை சமாளிக்கத் துப்பில்லை நமது அமைச்சர் பெருமக்களுக்கு. அமெரிக்காக்காரன் பயோ டீசல் தயாரிப்பதால் தான் இங்கே விலைவாசி உயர்கிறது என அறிக்கைகள் வெளியிட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றனர்.

======++++++======

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: