கிருமி

07/08/2008

ரஜினிகாந்த்திடம் மோசடி… மூவருக்கு வலைவீச்சு….

சில ஆண்டுகள் முன்பு கர்நாடக நதி நீர் பிரச்சினை தொடர்பாக பிரபல நடிகர் ரஜினிகாந்த் தன்னந்தனியே உண்ணாவிரதம் இருந்தார். தேசிய நதி நீர் இணைப்புக்காக ஒரு கோடி ரூபாய் தமது சொந்த பணத்திலிருந்து தருவதாக அந்த உண்ணாவிரதத்தில் அவர் அறிவித்தார். அந்த அறிவிப்பை பயன்படுத்தி மூன்று பேர் அவரிடம் மோசடி செய்துள்ள‌ன‌ர்.

இன்று காலை அடையாளம் தெரியாத மூன்று பேர் ரஜினிகாந்த் வீட்டுக்கு சென்றனர். தாங்கள் தேசிய நதி நீர் இணைப்புக்காக வந்திருப்பதாகவும், முதலில் கூவம் ஆற்றையும், அடையாறு நதியையும் இணைக்கப் போவதாகவும் ரஜினிகாந்திடம் கூறியுள்ளனர். அவர் அளிப்பதாக இருந்த ஒரு கோடி ரூபாயை தருமாறு கேட்ட அவர்களை நம்பிய ரஜினிகாந்த் மகிழ்ச்சியுடன் ஒரு கோடியே ஒரு ரூபாய் ரொக்கமாக கொடுத்துள்ளார்.

நேற்று மதியம் நதி நீர் இணைப்பு வேலையைப் பார்வையிடச் சென்றபோது தான், தாம் ஏமாற்றப்பட்ட விஷயம் அவருக்கு தெரிய வந்தது.

உடனடியாக எழும்பூரிலுள்ள காவல் துறை ஆணையாளர் அலுவலகம் சென்று இந்த மோசடி குறித்து ரஜினிகாந்த் புகார் கொடுத்தார். அகில‌ உல‌க‌ ர‌ஜினிகாந்த் ர‌சிக‌ர் ம‌ன்றத் த‌லைவ‌ர் ச‌த்திய‌நாராயணா உட‌ன் இருந்தார்.

வந்திருந்த மூன்று மோசடிப் பேர்வழிகளும் மண்வெட்டி, மண்கூடை, தலைச் சும்மாடு, லுங்கி சகிதம் வந்திருந்ததால் அவர்கள் நிஜமாகவே நதிகளை இணைப்பவர்கள் என்று தாம் நம்பி விட்டதாக ரஜினிகாந்த் கூறினார்.

மோசடிக்காரர்களுக்கு வலைவீச்சு….

புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறை ஆணையாளர், உடனடியாக காசிமேடு, டுமீல்குப்பம், நொச்சிக்குப்பம் ஆகிய மீனவர் பகுதிகளுக்கு சென்றார். மோசடிப்பேர்வழிகளை வலைவீசிப் பிடிப்பதற்காக‌ அந்த பகுதி மீனவர்களிடம் இருந்து வலைகளை இரவல் பெற்றுக் கொண்டார்.

ஓரிரு நாட்களில் மோசடிக்காரர்களை கைது செய்து விடலாம் என்று காவல் ஆணையாளர் நம்பிக்கை தெரிவித்தார்.

+++++++++********+++++++++

Advertisements

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: