கிருமி

18/09/2008

உங்களுக்கும் மரணம் வரும்………..

நம்பவே முடியவில்லை, இது பொய்யாக இருக்கக்கூடாதா என்ற ஏக்கம் மேலிட்டது.

நல்ல ஆரோக்கியத்துடன் திடகாத்திரமாக இருந்த எனது நெருங்கிய நண்பர் முதல் மாரடைப்பிலேயே காலமாகி விட்டார். மரணம் சற்று சர்ச்சைக்குரியதாகி விடவே போஸ்ட்மார்ட்டம் செய்த பின்னரே உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. அவரது அடுக்கக வீட்டுக்கு ஆம்புலன்சில் எடுத்து வரப்பட்ட அவரது உடல் கார் பார்க்கிங்கில் பார்வைக்காக ஆம்புலன்சிலேயே வைக்கப்பட்டிருக்கிறது.

பழகுவதற்கு மிக இனிமையானவர், நாணயமானவர், கெளரவமானவர், காவல் அதிகாரி போன்ற கம்பீரத் தோற்றமுடையவர், விதிகளை மீறாதவர் எனப் பலவாறு பாராட்டப்பட்டவர் அவர். நேற்று வரை அவருக்கு வந்த தொலைபேசி அழைப்புகள் எத்தனை, சுற்றி வந்த நண்பர்கள் எத்தனை பேர், அட்டவணை போட்டு சுற்றி வரும்படியான நண்பர்கள். இன்று அவருக்காக அழுது கொண்டிருப்ப‌வர் அவரது மனைவி மட்டுமே. அவர் அழுவது கண்டு கண்கலங்கி சிலர் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தனர், அவ்வளவுதான். ஆம்புலன்சுக்கு அருகில் போக மனமில்லையோ அல்லது பயமோ தெரியவில்லை, சொல்லி வைத்தது போல் எல்லோரும் தொலைவிலேயே நின்று கொண்டிருந்தனர். அவரது பத்து வயது மகன் திகிலடித்துப் போய் அங்குமிங்கும் செய்வதறியாது அலைந்து கொண்டிருந்தான். அவனை அணைக்கவோ ஆறுதல் சொல்லவோ எவரும் எத்தனிக்கவில்லை.

பாவம், அவருக்கு ஒரு மாலை வாங்கிப் போடக் கூட ஆளில்லை. அந்த அளவு அலட்சியம். இறந்தவருக்கு என்ன வாங்கிப் போட்டு என்ன ஆகப்போகிறது என்ற பகுத்தறிவுத்தனமாகக் கூட இருக்கலாம். மாலை கூட இல்லாததைக் கண்டு வெறுத்துப் போய் நண்பருடன் பைக்கில் சென்று மாலை வாங்கி வந்தேன். பைக்கில் என் பின்னால் அமர்ந்து மாலையைச் சுமந்து வந்த நண்பருக்கு மாலை சாத்த உடன் வர தயக்கம். எனக்கு கஷ்டமாக இருக்கிறது வரவில்லை என்று நூறடி தள்ளியே நின்று விட்டார். மாலையை ஆம்புலன்சில் படியேறிப் போட எனக்கு உதவி செய்ய எவருமில்லை. நான் திணறுவது கண்ட ஆம்புலன்ஸ் டிரைவர் அரைமனதுடன் பீடியை வீசிவிட்டு வந்து உதவினார்.

அலுவலக நண்பர்கள் பற்றிச் சொல்லவே தேவையில்லை. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட், இறப்பு சான்றிதழ் வந்த‌ உடன் பைல் செய்ய வேண்டும் போன்ற அலுவலக ரீதியான விஷயங்கள் மட்டுமே விவாதிக்கப்பட்டன‌. மலர் வளையம் வைத்த பின் ஜன்னல் கண்ணாடி வழியாக ஒரு பயப் பார்வை, அத்துடன் கழன்று கொண்டனர். வேண்டா வெறுப்பாக, வேறு வழியின்றி, வந்தாக வேண்டுமே என்று வந்தவர்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்.

கடைந்தெடுத்த அயோக்கியன் இறந்தால் கூட சொல்லப்படுகிற “பாவம் நல்ல மனுஷன் போயிட்டாரு” போன்ற சம்பிரதாயமான வார்த்தைகளைக் கூட அங்கே கேட்க முடியவில்லை. “இம்பெர்சனல் அஃபிஷியல் ஒர்க்” மாதிரி ஒரு வேலைக்கு வந்தது போன்ற இறுக்கமான எந்திர முகபாவனைகள், அவற்றில் மெய்யான‌ வருத்தம் புலப்பட‌வில்லை.

தேவையற்ற ஒரு இறுக்கம், அது துக்கத்தின் பொருட்டு விளைந்ததல்ல என்று தெளிவாகத் தெரிகிறது. தவறிக்கூட சிரித்து விடக்கூடாது, அதிரப் பேசக்கூடாது என்று எச்சரிக்கையாக இருந்த முகங்களில் வலுக்கட்டாயமாக வரவழைக்கப்பட்ட கவலை தொக்கி நிற்கிறது. சில அக்கம்பக்கவாசிகள் மற்றும் வழிப்போக்கர்களின் பரிதாபப் பார்வைகள் மட்டுமே சொல்லத்தக்கவை.

போஸ்ட் மார்ட்டம் செய்ததால் வீட்டுக்குள் கொண்டு செல்லாமல் உடனடியாக‌ பக்கத்திலிருக்கும் மயானத்திற்கு கொண்டு போகிறார்கள் என்று முதலில் உறவினர் ஒருவர் தெரிவித்தார். பின்னர், ஊருக்குத்தான் கொண்டு செல்கிறார்கள் என்ற செய்தி வந்த‌தும் கூட்டம் கலைய ஆரம்பிக்கின்ற‌து.

“அதான் ஊருக்கு கொண்டு போறாங்களாமில்லே, நாம இருந்து என்ன பண்ண” என்ற முணு முணுப்புகள் கேட்கின்றன‌. இறந்தவருக்கு மாலை கூட இடாதவர்கள், கடைசி வரை இருந்து என்ன செய்ய‌ முடியும் என்று தெரியவில்லை.

“நல்ல வேளையா ஊருக்கு கொண்டு போறாங்க, இல்லேன்னா மயானம் வரைக்கும் கூடப் போயாகணும்” என்ற நிம்மதி பலரது முகங்களில் அப்பட்டமாகத் தெரிகிற‌து.

“பரவாயில்லை, மயானம் வரை போற சிரமம் மிச்சம், அதனால ஆம்புலன்ஸ் கிளம்பற வரை இருக்கலாம்” என்று சிலர் பெரியமனதுடன் முடிவு செய்துவிட்டிருந்தனர்.

“அடேங்கப்பா ஊரு வரைக்கும் போயிட்டு வரணுமா?” என்று கறுப்பு கால்சராயில் துக்கம் அனுஷ்டிக்கும் சில நாகரீக கனவான்களின் முகங்கள் கறுக்கின்றன……..

நகரத்தனத்தின் சுழலில் மனிதம் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

நோய் தொற்றிக் கொள்ளுமா? மறைந்தவர் பாய்ந்து வரப்போகிறாரா, பேய் பிசாசு பயமா? என்ன பயம் உங்களுக்கு?

நீங்கள் மேதாவிகளாகவும், பணம் படைத்தவர்களாகவும், நகரவாசிகளாகவும்,இருக்கலாம். மனிதர்களாக இருக்கிறீர்களா? சக மனிதனது மரணத்திற்குக் கூட மரியாதை செலுத்தாத, இரங்காத நீங்கள் பண்பாடற்ற காட்டுவாசிகள் என்று சொன்னால் அது மிகையாகாது. உங்களுக்கு கஷ்டம் வந்த போது உதவியவர், அறிவுறுத்தியவர், நேற்று வரை கூடிக் குலவியவருக்கு நீங்கள் செய்யும் இறுதி மரியாதை இதுதானா? ஒருவருடன் மணிக்கணக்கில் அரட்டையில் நேரத்தைக் கழித்த நீங்கள் அவரது இறுதிச் சடங்குக்கு மயானம் வரை செல்ல நேரக்கணக்கும் சிரமமும் பார்க்கிறீர்களே, நாளை உங்களுக்கும் மரணம் வரும், நினைவில் கொள்ளுங்கள்.

Advertisements

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: