கிருமி

28/05/2010

தெரியாம செஞ்சா தப்பு! தெரிஞ்சு செஞ்சா மப்பு!

Filed under: அரசியல் — கிருமி @ 1:01 பிப
Tags: , ,

இரண்டு நாள் முன்பு சென்னை மாநகரப் அரசுப் பேருந்தின் பின்புறம் ஒரு விளம்பரம்.  கோட்டும் சூட்டும் அணிந்த ஒரு இளைஞனின் ஒயிலான காட்சியுடன் விளம்பரம் “வெற்றிக்கு சாந்தி” என்று.  சரி ஏதோ கல்வி நிறுவனம், அல்லது நிர்வாகம் சம்பந்தப்பட்டது போலும் என்று நெருங்கிப் பார்த்தால் அது சாந்தி சூப்பர் குட்கா மசாலாவின் விளம்பரம்.  பான் மசாலா போன்றவை போதைப் பொருட்கள், உடலுக்கு தீங்கு விளைவிப்பவை என்று தெரிந்தும் அரசுப் பேருந்தில் விளம்பர இடம் தரும் மாநில அரசு நிர்வாகங்கள்.  சாராய விளம்பரத்துக்கு தடை இருக்கிறது, ஆனால் இதற்கெல்லாம் கிடையாது போலும்.

(இதுக்கு எப்டி தலைப்பு வைக்கறதுன்னு தெரியல, அதனால ஒரு பஞ்ச் தலைப்பு!)

Advertisements

23/05/2010

தமிழும் தமிழக அரசியல்வாதிகளும்.

Filed under: அரசியல் — கிருமி @ 6:00 பிப

வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில் தமிழுக்கு முதலிடம் தர வலியுறுத்தும் சட்டம் அமல்படுத்தப்படப் போவதாகத் தெரிகிறது.  அரசு சமீபத்தில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டது.  டிசம்பர் மாதத்திலேயே அறிவிப்பொன்று செய்யப்பட்டாலும் சில நாட்களாக இது தொடர்பான செய்திகள் ஆங்காங்கு தென்படுகின்றன.

இத்தனை ஆண்டுகளாக ஆண்டு வந்த திராவிடக் கட்சிகள் 2010 ஆம் ஆண்டில் இது போன்ற ஒரு அறிவிப்பை வெளியிட நேர்ந்தமைக்காக வெட்கிச் சாக வேண்டும்.

சட்டமிட்டு தமிழில் எழுத வைக்கிறார்கள், இது மக்களின் மனதில் உதித்திருக்க வேண்டுமே நியாயமாக. அரசன் எவ்வழி மக்களும் அவ்வழியல்லவா?  அரசியல்வாதிகள் இந்தியை எதிர்க்கிறோம் என்று ஆங்கிலத்தை அல்லவா திணித்துள்ளார்கள் நம் மீது.

தமிழக அரசு அறிவிப்புகள் இனி தமிழிலேயே (அல்லது தமிழிலும்) வெளியிடப்பட வேண்டும் என்று ஒரு அரசாணை ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட ஒரு மாநிலத்தில் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

கீழுள்ள விளம்பரக்குறிப்பு மயிலை வட்டார வணிகர் சங்கத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ளது.  அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ள சில தமிழ்ச்சொற்களைக் கண்டால் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

டாஸ்மாக் - Tasmac

கிருமி  Tasmac

கையொப்பமே தமிழில் இடாமல் இருக்கும் அதிகாரிகளின் பொறுப்பில் தான் தமிழ் பாதுகாப்பு இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மயிலை வணிகர் சங்கம் வெளியிட்ட இக்குறிப்பேடு போல் அரசு தமிழார்வலர்களைக் கொண்டு (தமிழறிஞர்கள் அல்ல) ஒரு வழிகாட்டியையோ அகராதியையோ வெளியிட்டு இருந்தால் பாராட்டலாம்.

அரசு ஏற்று நடத்தி வரும் மதுக்கடைகளின் பெயர்ப்பலகைகளைக் கொஞ்சம் பாருங்கள்.  கொட்டை எழுத்தில்  டாஸ்மாக் ஒயின் ஷாப் என்று இருக்கும்.  அரசு நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளை முதலில் மாற்றித் தொலையட்டும் தமிழக அரசு, பின் மக்களை வற்புறுத்தலாம்.

(இது பழைய படம்.  புதிய படத்தில் இளஞ்சிவப்பில் பலகை இருக்கும், ஆனால் தமிழுக்கு இதே நிலைதான்)

19/05/2010

ஈழப் பிரச்சினையில் தினமணி.

Filed under: அரசியல்,பொது — கிருமி @ 10:06 பிப
மாவீரன்

பிரபாகரன் - தினமணி

பல வருடங்களாக நான் தினமணி வாசகன்.  ஈழப் பிரச்சினையை தினமணியை விட எந்த ஊடகமும் நேர்மையாக அணுகவில்லை.  2007 அல்லது 2008 ஆம் ஆண்டிலெல்லாம் தினமணியின் இணைய தளத்தில் இலங்கைக்கென தனிப்பகுதி ஒதுக்கி ஈழச் செய்திகளை வழங்கி வந்தது தினமணி.  என்ன காரணத்தாலோ சில மாதங்களில் அப்பகுதி நிறுத்தப்பட்டு விட்டது.  ஆனாலும் தமிழர்களைக் கொன்றொழித்த வரலாற்றை கூடுமானவரை கடும் விமர்சனங்களுடன் தினமணி பதிவு செய்திருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.  தினமலர், நக்கீரன் போன்ற எலும்பு பொறுக்கிகளுக்கு மத்தியில் நேர்மையாகவே தகவல்களை அளிக்கும் தினமணி, பிரபாகரனின் மரணச் செய்தியை “வீரமரணம்” என்று அறிவித்தது.  (2009 ஆம் ஆண்டின் மாவீரர் தினத்தைக் கூட “மாவீரன் தினம்” என்று ஒருமையில் குறிப்பிட்டு தனது வெறுப்பையும் காழ்ப்புணர்வையும் உமிழ்ந்தது தினமலர் நாளேடு).

கொடூரமாக தமிழினம் வேட்டையாடப்பட்டு தலைமைப் போராளி வீரச்சாவடைந்த செய்தியின் கீழே கருணாநிதி தில்லியில் முகாமிட்டு தனது வாரிசுகளுக்கு பதவி வேட்டையாடிக்கொண்டிருந்த இழி செய்தியையும் வரலாற்றில் மிகச்சரியாகவே பதிவு செய்துள்ளது தினமணி.

“இந்தியத் தமிழர்களும், தமிழக அரசியல்வாதிகளும் செய்த துரோகம் துளைத்த அளவுக்கு விடுதலைப் புலிகளின் மார்பை எந்தத் தோட்டாக்களும் துளைத்திருக்கவில்லை.” என்று சாடுகிறது தினமணி.

eelam cartooneelam dinamani cartoondinamani tamil eelam cartoonltte cartoonsrilanka warcrime cartoonbuddhist massacre cartoon

06/05/2010

ஹார்வர்ட் பல்கலையில் இந்திய டீன்!

Filed under: பொது — கிருமி @ 12:51 பிப

////// ஹார்வர்ட், மே 5: தொழில், வணிக மேலாண்மைப் பாடங்களைக் கற்றுத்தருவதில் சர்வதேச தரம் வாய்ந்த ஹார்வர்ட் கல்வி நிலையத்தின் (எச்.பி.எஸ்.) டீன் பதவிக்கு நிதின் நோரியா என்ற இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.   இவர் மும்பை ஐ.ஐ.டி.யில் கெமிக்கல் இன்ஜினீயரிங் பிரிவில் 1984-ல் பட்டம் பெற்றார். அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் நகரில் உள்ள ஸ்லோவன் நிர்வாகவியல் கல்விக்கழகத்தில் பி.எச்.டி. பட்டம் பெற்றார். பிறகு ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் (எச்.பி.எஸ்.) என்ற வணிக மேலாண்மைக் கல்வி நிலையத்தில் ஆசிரியர் பணியில் சேர்ந்து படிப்படியாக பதவி உயர்வுபெற்று தன்னுடைய திறமையை நிரூபித்தார்.  102 ஆண்டு கால வரலாறு படைத்த இந்த கல்வி நிலையத்தின் 10-வது டீனாக இந்தியருக்கு இந்த கெüரவம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.  ///// தினமணி செய்தி

1984 இல் இந்தியாவில் பட்டம் பெற்று, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக வேறொரு நாட்டில் சுய தேவைகளுக்காக பணி புரிந்த ஒருவரை பெரும் பதவி என்று சொல்லப்படுகிற ஒரு பதவியை அடையும்போது மட்டும் இந்தியர் என்பதற்காக ஏன் ஊடகங்கள் கொண்டாட வேண்டும் என்று புரியவில்லை.    இத்தனை ஆண்டுகள் இந்தியாவுக்கு எதுவும் செய்யாத “இது போன்ற சாதனையளர்” கூட இனி தாம் படித்த பள்ளிக்கூட கட்டிடத்துக்கு நிதி வழங்குவார், அவரது ஊருக்கு ஏதாவது செய்வார், அதையும் ஊடகங்கள் பிரபலப்படுத்தும்.

ஹார்வர்ட் பல்கலை என்ன வியாபாரக் கல்விக்கான அளவுகோலா?  அப்படியாயின் அந்த அளவுகோலை விட சிறந்ததாக ஏன் ஒன்றை இந்தியாவில் உருவாக்கக் கூடாது?  ஹார்வர்ட் என்றில்லை ஆஸ்கர், நோபெல், கிராமி என்று அனைத்துக்கும் உலகப் பிரபலமானவற்றையே பின்பற்றிக் கொண்டிருந்தால், பின்பற்றிக் கொண்டே இருக்க வேண்டியது தான்.  சொந்தமாக எதுவும் செய்ய முடியாது.  இந்தியர்கள் சொந்தமாக ஏதேனும் செய்வது போல் மேற்கண்டது போல் சாதனைகள் தோற்றமளித்தாலும், பெயர் வாங்குவதென்னவோ ஹார்வர்ட் போன்ற அன்னிய நிறுவனங்கள் தான்.

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: