கிருமி

30/08/2011

அன்னா ஹசாரே நாடகம்

ஒரு வழியாக அன்னா ஹசாரேயின் நாடகம் (இதை இப்படித்தான் சொல்ல முடிகிறது) முடிந்தது.  ஜன் லோக்பால் வரப் போகிறதாம்.  இது வந்தால் பாரதம், சிங்கப்பூர் மாதிரி ஆகி விடுமாம்.

அன்னா ஹசாரேக்கு விஜய், ரஜினிகாந்த், அமீர்கான் போன்ற பிரபலங்கள் எல்லாம் ஆதரவு கூறுகின்றனர்.  ஒரு பூ விற்கும் பெண்மணி அன்னாவின் படத்திற்கு மாலை அணிவிக்கிறார், தினமணியில் படம் போட்டிருந்தனர்.  ஜன் லோக்பால் மூலம் பிரதமர் ஊழலில் ஈடுபட்டால் கூட தண்டிக்கலாம் என்றே வைத்துக் கொள்ளலாமே.  அதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகுமோ?  என்ன இழவோ.

அன்னா சொல்லும்படி ஜன் லோக்பால் வந்து விட்டால்,   சாலையில் நிற்கும் போக்குவரத்து காவலர் லஞ்சம் வாங்காமல் இருக்கப் போகிறாரா?  வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் காசு தராமல் வேலை நடக்கப் போகிறதா?  வீடு கட்ட வரைபட அனுமதி கையூட்டின்றி வாங்கி விடத்தான் முடியப் போகிறதா?

நேற்று காலை, அரும்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில், கல்லூரி மாணவ மாணவிகள் ஒரு ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர்.  கைகளில் ஊழல் எதிர்ப்பு வாசகங்கள் தாங்கிய அட்டைகளை தாங்கியிருந்தனர்.  சிற்சிலர் கைகளில் தமிழிலும் வாசகங்கள் தென்பட்டன.  இவர்கள் எதை சாதிக்க எண்ணுகின்றனர் என்பது தெரியவில்லை.  ஊர்வலம் போனால் ஊழலை ஒழித்து விடலாம் என்று எண்ணி விட்டார்களா?  அவர்கள் அப்படி நம்ப வைக்கப்படுகின்றனர்.  யாரிடம் என்ன செய்தியை இவர்கள் கொண்டு செல்கின்றனர்?

இத்தனை நாட்கள் (பதின்மூன்று நாள் என எண்ணம்) அன்னாவின் உண்ணாவிரத நாடகம் நடந்ததே.  இத்தனை பெரிய நாட்டில், எங்காவது யாராவது, இன்ன அலுவலகத்தில் ஊழல் நடக்கிறது, என்னிடம் ஒரு வேலைக்காக லஞ்சம் கேட்கிறார்கள் என்று அந்த அலுவலக வாயிலில் உண்ணாவிரதம் இருந்தாரா?  குறைந்தபட்சம் எதிர்த்து குரலாவது கொடுத்தாரா?  ஊழலை எதிர்த்து போராடுபவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டுமானால், அப்படி கொடுத்துப் பார்க்கட்டும்.  அத்தனை பேரும் அன்னாவாகி விடலாம்.  அனைவரும் கதாநாயகர்கள் தான்.

ஒரு வேளை,  யாராவது அப்படிக் கிளம்பி விட்டால்?  அப்படி ஏதாவது நடக்க விட்டு விடுவார்களா அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும்.  அப்படி யாராவது கிளம்பினால், அனுமதியின்றி உண்ணாவிரதம் இருக்க முயன்ற சமூக துரோக குற்றத்திற்காக அவர் கைது செய்யப்படுவார், மிரட்டப்படுவார், தேவைப்பட்டால் கொல்லப்படுவார்.  இம்மாதிரி நடக்கும் பட்சத்தில் இயல்பாக சுற்றி இருப்பவர்களுக்கு, நாளை நமக்கும் இது நேரலாம் என்ற உணர்வு ஏற்படலாம், கொந்தளிக்கலாம், அதற்கு அமைப்புகளும் சில துணை புரியலாம், அப்போது பிறக்கும் விழிப்புணர்வும், மெய்யான போராட்டமும்.  தமது உரிமைகளுக்காக மக்கள் போராட எத்தனிக்கும் வரை, ஒரு மண்ணும் நடக்காது.  அரசியல் கட்சிகளையும், அன்னா, பாபா ராம்தேவ் போன்றவர்களையும் நம்பினால் ஒரு பயனும் இருக்காது என்பது திண்ணம்.

Advertisements

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: