கிருமி

07/08/2008

ரஜினிகாந்த்திடம் மோசடி… மூவருக்கு வலைவீச்சு….

சில ஆண்டுகள் முன்பு கர்நாடக நதி நீர் பிரச்சினை தொடர்பாக பிரபல நடிகர் ரஜினிகாந்த் தன்னந்தனியே உண்ணாவிரதம் இருந்தார். தேசிய நதி நீர் இணைப்புக்காக ஒரு கோடி ரூபாய் தமது சொந்த பணத்திலிருந்து தருவதாக அந்த உண்ணாவிரதத்தில் அவர் அறிவித்தார். அந்த அறிவிப்பை பயன்படுத்தி மூன்று பேர் அவரிடம் மோசடி செய்துள்ள‌ன‌ர்.

இன்று காலை அடையாளம் தெரியாத மூன்று பேர் ரஜினிகாந்த் வீட்டுக்கு சென்றனர். தாங்கள் தேசிய நதி நீர் இணைப்புக்காக வந்திருப்பதாகவும், முதலில் கூவம் ஆற்றையும், அடையாறு நதியையும் இணைக்கப் போவதாகவும் ரஜினிகாந்திடம் கூறியுள்ளனர். அவர் அளிப்பதாக இருந்த ஒரு கோடி ரூபாயை தருமாறு கேட்ட அவர்களை நம்பிய ரஜினிகாந்த் மகிழ்ச்சியுடன் ஒரு கோடியே ஒரு ரூபாய் ரொக்கமாக கொடுத்துள்ளார்.

நேற்று மதியம் நதி நீர் இணைப்பு வேலையைப் பார்வையிடச் சென்றபோது தான், தாம் ஏமாற்றப்பட்ட விஷயம் அவருக்கு தெரிய வந்தது.

உடனடியாக எழும்பூரிலுள்ள காவல் துறை ஆணையாளர் அலுவலகம் சென்று இந்த மோசடி குறித்து ரஜினிகாந்த் புகார் கொடுத்தார். அகில‌ உல‌க‌ ர‌ஜினிகாந்த் ர‌சிக‌ர் ம‌ன்றத் த‌லைவ‌ர் ச‌த்திய‌நாராயணா உட‌ன் இருந்தார்.

வந்திருந்த மூன்று மோசடிப் பேர்வழிகளும் மண்வெட்டி, மண்கூடை, தலைச் சும்மாடு, லுங்கி சகிதம் வந்திருந்ததால் அவர்கள் நிஜமாகவே நதிகளை இணைப்பவர்கள் என்று தாம் நம்பி விட்டதாக ரஜினிகாந்த் கூறினார்.

மோசடிக்காரர்களுக்கு வலைவீச்சு….

புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறை ஆணையாளர், உடனடியாக காசிமேடு, டுமீல்குப்பம், நொச்சிக்குப்பம் ஆகிய மீனவர் பகுதிகளுக்கு சென்றார். மோசடிப்பேர்வழிகளை வலைவீசிப் பிடிப்பதற்காக‌ அந்த பகுதி மீனவர்களிடம் இருந்து வலைகளை இரவல் பெற்றுக் கொண்டார்.

ஓரிரு நாட்களில் மோசடிக்காரர்களை கைது செய்து விடலாம் என்று காவல் ஆணையாளர் நம்பிக்கை தெரிவித்தார்.

+++++++++********+++++++++

Advertisements

13/05/2008

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீண்டும் அழுகை...

Filed under: நையாண்டி விலாஸ் — கிருமி @ 11:05 முப
Tags:

சில நாட்கள் முன்பு ஹர்பஜன் சிங்கிடம் அறை வாங்கி அழுத ஸ்ரீசாந்த் மீண்டும் அழுது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நேற்று போட்டி துவங்கும் முன் கிரிக்கெட் வீரர்கள் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது பக்கத்தில் இருந்த ஒரு சக வீரர் ஸ்ரீசாந்தின் தட்டில் இருந்த வடையை நைசாக திருடி விட்டதாகத் தெரிகிறது. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே சாப்பிட்டதில் ஸ்ரீசாந்துக்கு இடதுபுறம் இருந்தவர் திருடினாரா அல்லது வலதுபுறம் இருந்தவர் திருடினாரா என்று ஸ்ரீசாந்துக்கு தெரியவில்லை.

தனது வடை திருடப்பட்டதை அறிந்த ஸ்ரீசாந்த் கேன்டீனிலேயே அழ ஆரம்பித்து விட்டார். சக வீரர்கள் அவரைத் தேற்ற வேறு ஒரு வடையை கொடுத்தனர். ஆனால் திருடப்பட்ட அதே வடை வேண்டும் என்று ஸ்ரீசாந்த் தேம்பித்தேம்பி அழுதார்.

கேன்டீனிலிருந்து மைதானம் வரை அழுது கொண்டே வந்த ஸ்ரீசாந்த் தொலைக்காட்சியில் தனது முகம் தெரியும் வரை அழுதார். முதலில் பந்து வீசிய அவர் பந்தில் எச்சிலுக்கு பதில் கண்ணீரையே தோய்த்து வீசினார்…..

ஸ்ரீசாந்துக்கு குவியும் ச‌லுகைக‌ள், ஆதரவு

ஸ்ரீசாந்த் இனி போட்டிகளில் கலந்து கொள்ள‌ச் செல்லும்போதெல்லாம் அவரை ஆறுதல்படுத்த‌ அவ‌ர‌து அம்மாவும் உட‌ன் செல்ல‌ விமான‌ டிக்கெட் த‌ர‌ப்ப‌டும் என்று ஐபிஎல் நிறுவ‌ன‌ம் தெரிவித்துள்ள‌து.

புக‌ழ்பெற்ற‌ ரேம‌ண்ட்ஸ் துணி நிறுவ‌ன‌ம் ஸ்ரீசாந்துக்காக‌ அதிக‌ ஈர‌ம் உறிஞ்சும் த‌ன்மையுள்ள‌ கைக்குட்டைக‌ளை ஸ்பான்ச‌ர் செய்வ‌தாக‌ அறிவித்துள்ளது.

பிரபல பொம்மை தயாரிப்பு நிறுவனம் ஒன்று ஸ்ரீசாந்துக்கு பத்து ஆண்டுகளுக்கு தேவையான டெடி பியர் பொம்மைகளை இலவசமாய் வழங்குவதாக அறிவித்துள்ளது.

அகில உலக மலையாளிகள் சமாஜம் ஸ்ரீசாந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. உலகெங்கும் அனைத்து டீக்கடைகளையும் மூடி போராட்டம் நடத்தவிருப்பதாக மலையாள சமாஜத் தலைவர் தெரிவித்தார்.

இந்திய‌ குழந்தைத் தொழிலாள‌ர் த‌டுப்பு அமைப்பு ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்ப‌தாக‌ செய்திக‌ள் கூறுகின்ற‌ன‌.

===========

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: