கிருமி

27/01/2010

அதலக்காய்

Filed under: பொது — கிருமி @ 8:25 முப
Tags: , , ,

அதலக்காய் எங்கள் ஊர்ப்பக்கம் பிரபலமான ஒரு காய் வகையாகும்.  கசப்புச் சுவையுடையது, ஆனால் பாகற்காய் போன்று அதிக கசப்பல்ல, நடுத்தரமான கசப்பு.  மழைக்காலத்தில் மட்டும் கிடைக்கும் இது ஒரு களைச்செடி, தரையில் படரும் கொடி வகையாகும். உள்ளே வெண்டைக்காய் விதைகளைப் போன்று விதைகள் இருக்கும்.  மழை சமயத்தில் நான் ஊருக்குப் போனால் தினமும் அதலக்காய் பொரியல் எனக்காக செய்வார்கள்.   இரு புறமும் உள்ள காம்புகளைக் கிள்ளி எடுத்து விட்டு உப்பிட்டு வேகவைத்து, வாணலியில் போட்டு வதக்கினால் பொரியல் தயார்.  அதலக்காய் புளிக்குழம்பும் ஜோராக இருக்கும்.  மோர்மிளகாய் போல வற்றல் போட்டு வைத்துக் கொள்வதும் உண்டு, அதன் சுவையே தனி.   மற்ற காய்களைப் போல பிஞ்சிற்கும், முற்றலுக்கும் பெரிய அளவில் சுவை வேறுபாடு கிடையாது, கிட்டத்தட்ட ஒன்றாகத்தான் இருக்கும்.

யாரும் கேட்பாரின்றி வெகுசில காய்கறிக்கடைகளில் மட்டும் சல்லிசாகக் கிடைத்து வந்த அதலக்காய் இப்போது சந்தையில் கிலோ முப்பது, முப்பத்திரண்டு ரூபாய்க்கு பெரும்பாலான காய்கறிக்கடைகளில் கிடைக்கிறது.  களைச்செடியாகக் கருதப்பட்டு வந்த இக்காய், அனேகமாக இப்போது விளைவிக்கப்படுகிறது என்று நினைக்கிறேன்.

Advertisements

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: