கிருமி

26/04/2020

கரோனாவும் நாமும் – 3

Filed under: கரோனா — கிருமி @ 11:52 pm
Tags: , ,

தொலைகாட்சியில் வி.வி.டி தேங்காய் எண்ணைக்காரன் ஒரு பொது நல விளம்பரம் போடுகிறான். தேங்காய் எண்ணையை கையில் தேய்த்துக் கொண்டு போனால் பாக்டீரியா, வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கலாமாம்.

ஊரடங்கு ஆரம்பித்த இரண்டு நாளில் ஒரு தொலைக்காட்சி செய்தி. மாஸ்க் கிடைக்காத பனை ஏறும் தொழிலாளிகள், பனை ஓலையில் மாஸ்க் செய்து மாட்டிக் கொண்டு பனை மரம் ஏறும் வீடியோவுடன் வந்த்து. அதை பத்து ரூபாய்க்கு விற்கப் போவதாகவும் சொன்னார்கள்.

என்ன செய்வது? சில சமயம் பாமர மக்கள், இப்படித்தான் சிந்திப்பார்கள். (அதற்கு அறிவுரை சொல்லாமல்) அதை நூதன கண்டுபிடிப்பு என்று செய்தியாக வேறு போடும் சன் டிவி ஊடக மேதைகள்.

ஊரடங்கு போட்டு ஒரு மாதமாகிறது. இன்னும் “மாஸ்க் அணிந்து திருமணம் செய்து கொண்டனர்” என்று போட்டோவுடன் அல்பத்தனமாக செய்தி தரும் ஊடகங்கள். போதாக்குறைக்கு நம் செய்தித்தாள்களில், ஊடகங்களில், தொலைக்காட்சிகளில் படித்தவர்கள் தான் வேலை பார்க்கிறார்களா அல்லது முட்டாள்கள் மட்டுமே வேலை பார்க்கிறார்களா என்று சந்தேகமாக இருக்கிறது. கொரோனா நிவாரணமாக குடும்பத்துக்கு ஆயிரம் ரூபாய் என்று செய்தி வருகிறது. அட முட்டாள்களா, கொரோனா வந்தவனுக்கு காசு கொடுத்தால் தான் அது கரோனா நிவாரணம். ஊரடங்கு நிவாரணம் என்று போட்டாலாவது பரவாயில்லை.

பல “பிரபல” டாக்டர்கள் வேறு, அதைச் செய்தால் வைரஸ் பரவாது, இதைச் செய்தால் கரோனா வராது என்று வாய்க்கு வந்ததையெல்லாம் அடித்து விடுகிறார்கள். தினமலரில் ஒரு டாக்டர் சொல்லியிருந்தார் மன அழுத்தம் இல்லாமல் இருந்தால், வைரஸெல்லாம் தாக்காதாம். அந்த டாக்டருக்கு மன நல மருத்துவம் தான் செய்ய வேண்டும்.

உண்மையில் கரோனாவை எதிர் கொள்வது, அதற்கு மருத்துவம் பார்ப்பது போன்றவையெல்லாம் உலகம் முழுவதும் சோதனை அளவிலேயே இருக்கின்றன. டிரையல் அண்ட் எர்ர் மெத்தட் தான் எல்லா இடத்திலும்.. டிரையல் சக்சஸ் ஆனால் பிழைக்க வாய்ப்பு, எர்ர் எனில் சாவு, இது தான் உண்மை நிலை. மற்றபடி குருடர்கள் யானையைத் தடவிப் பார்த்து வர்ணித்த கதைதான் கரோனா பற்றி வரும் செய்திகளில் 99 விழுக்காடு.

செய்தித்தாள்கள் மெடிக்கல் எமர்ஜென்சியில் அவ்வளவு அத்தியாவசியமா என்ன? ஒரு பேப்பர் போடும் பையனுக்கு வியாதி இருந்து விட்டால் ஊரெல்லாம் கொடுத்து விடுவானே. பேப்பர் போடுபவர்கள் கொரோனா வீர்ர்களாம் (தினமலர்). தன் தொழில் கெட்டு விடுமோ என்ற பயம்.

ரூபாய் நோட்டு மூலம் பரவாது என்றார்கள். தொட்டால் பரவும் ஒட்டுவாரொட்டி வியாதி ரூபாய் நோட்டு மூலம் பரவாமல் எப்படி இருக்க முடியும் – ஒருவரும் கேள்வி கேட்கவில்லை. இன்று லாரி டிரைவர்சீட்டு விளையாடியதால் பலருக்கு வியாதி பரவியது என்கிறார்கள். அந்த லாரி டிரைவர் சீட்டு விளையாடியதன் மூலம் பரப்பி இருந்தால், அவன் காசு கொடுத்து பொருள் வாங்கிய கடைக்காரர்களுக்கு பரவி இருக்காதா? என்னய்யா உங்க லாஜிக்.

இது பரவாமல் தடுக்க சில எளிய வழிமுறைகள், என் சிற்ற்றிவுக்கு எட்டியவரை. ஒருவரை ஒருவர் தொடாமல், அருகில் நெருங்காமல் இருத்தல், ஒருவர் தொட்ட்தை இன்னொருவர் தொடாதிருத்தல். தொட வேண்டிய அவசியம் இருந்தாலும், அப்பொருளை கூடுமானவரை சுத்தம் செய்து பின் தொடுதல், தும்மல் இருமல் காய்ச்சல் இருப்பவர்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லாதிருத்தல், உரிய சிகிச்சை எடுத்தல், தினசரி டைரிக்குறிப்பு எழுதுதல் போன்ற சிம்பிளான வழிகள் தான்.

சந்தடி சாக்கில் டெட்டால், லைசால் கார்ரகள் வீடெல்லாம் ஸ்பிரே அடித்து கிளீன் செய்வது போல பொது நல விளம்பரம் செய்து மக்களைக் குழப்புகிறார்கள். வீடுகளில் அடிக்கடி பயன்படுத்தும் கைப்பிடி, டைனிங் டேபிளைத் துடைக்கச் சொல்கிறார்கள். இதிலிருந்து கரோனா உருவாகிறதா என்ன? ஒருத்தருக்கு வந்தால் அறிகுறி வெளியில் தெரியும் முன்னரே சாதாரண சளியே பரவி விடுகிறது. ஒட்டி ஒரே வீட்டில் இருப்பவருக்கு வராமல் கரோனா போகுமா? கைப்பிடிகளைத் துடைத்து டைனிங் டேபிளைத் துடைத்து விட்டால் கணவருக்கு வந்த கரோனா மனைவிக்கு வராமல் போகுமா?

முட்டாள்தனமாக கருத்து சொல்லாமல், செய்திகள் போடாமல், ஏமாற்றி கெமிக்கலை விற்கும் விளம்பரம் போடாமல் சிவனே என்று இருந்தால் பாமர மக்கள் கூட தானாக விழிப்புணர்வு பெற்று விடுவார்கள்.

24/04/2020

கரோனாவும் நாமும் – 2

Filed under: கரோனா — கிருமி @ 3:28 pm

முதலிலேயே ஒழுங்காக, ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் காய்கறி, மளிகைக் கடைகள் செயல்படும் என்று அறிவித்திருந்தால் ஒரு ஒழுங்கு வந்திருக்கும். ஊருக்கு ஒரு சட்டம் என்பது போல செயல்பாடுகள் உள்ளன.

(தடை செய்யப்பட்ட) கிருமி நாசினி சுரங்கப்பாதை என்று கூகிளில் தேடிப் பார்த்தேன்.  அதிர்ச்சியான ஒரு தகவல்.  அதை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் திருப்பூர் கலெக்டெராம்.  அவர் ஒரு எம்.பி.பி.எஸ் படித்த டாக்டராம், ஐ.ஏ.எஸ் அதிகாரியுமாம்.  அவருக்கே அது உருப்படாத அமைப்பு என்று தெரியவில்லை.  அதற்கு பாராட்டுகள் குவிந்துள்ளன, நிர்மலா சீதாராமன் வேறு அந்த கலெக்டருக்கு நற்சான்றிதழ் கொடுத்தாராம்.

ஒரு காலேஜ் லெக்சரர், அவரிடம் ஒரே மாஸ்க் தான் இருக்கிறதாம்.  ஒரு நாள் மாஸ்க் போட்டு வெளியில் போனால், மறு நாள் துவைக்காமல் அதே மாஸ்க்கை உள்பக்கம் வெளிப்பக்கமாக திருப்பி போட்டுக் கொண்டு போவாராம் அந்த மாமேதை.

வாத்தியார்களுக்கும், அதிகாரிகளுக்கும், டாப் லெவல் அரசியல்வாதிகளுக்குமே இது பற்றிய புரிதல் இல்லை. அப்புறம் பாமர மக்களுக்கு என்ன தெரிந்திருக்கும்?

புதிதாக ஏதாவது செய்ய வேண்டியது, அது சரியோ தவறோ….. அதை போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டியது……… விளம்பரம்…………… விளம்பரம்………….. எதை செய்தாலும் விளம்பரம் தான்.  விளம்பர போதை தலைக்கேறி அலைகிறார்கள்.  கூலியிலிருந்து கோமான் வரை யாரும் விதி விலக்கில்லை.

குடிப்பதையும், புகைப்பதையும் திடீரென நிறுத்தினால் பயங்கரமான பின் விளைவுகள் இருக்கும், மன நலம் பாதிக்கப்படும், அது வரும் இது வரும் என்றெல்லாம் பயமுறுத்தியே நம்மை ஏமாற்றி வந்துள்ளார்கள் என்று இச்சமயத்தில் புரிகிறது.  ஏதோ ஒன்றிரண்டு பிரச்சினைகள் வரத்தான் செய்யும், ஆனால் அதெல்லாம் விஷயம் அல்ல என்று புரிந்து கொள்ள வேண்டும்.  இத்தனை நாள் “அறிவியல் பூர்வமாக” என்று சொல்லப்பட்ட ஒரு மிகப்பெரிய பித்தலாட்டம் இப்பொழுது பல்லை இளிக்கிறது.

அப்படியே மது விலக்கை ஒட்டு மொத்தமாக அமல்படுத்தி விட்டால் தமிழகத்தின் நிரந்தர முதல்வர் எடப்பாடி தான் என்பது என் எண்ணம்.

கரோனாவும் நாமும் – 1

Filed under: கரோனா — கிருமி @ 3:00 pm
Tags: , ,

கரோனாவும் நாமும் – 1

இந்த கரோனா லாக்டவுன் எனது பல, நிறைவேறவே வாய்ப்பில்லை எனக் கருதத் தக்க கனவுகளை நிறைவேற்றி விட்டது.  ஆளில்லாத சாலைகள்.  ஆரவாரமற்ற திருமணங்கள், சாவுகள், சந்தடியற்ற வழிபாட்டுத் தலங்கள், காதைப்பிளக்கும் ஒலி பெருக்கிகள், சந்தோஷமான பறவைகள், சுதந்திரமான விலங்குகள், குறைந்துள்ள விலைவாசி, குறைந்துள்ள தண்ணீர் தேவை, குறைந்துள்ள அனாவசிய செலவினங்கள், அடாவடி வியாபாரிகள் பலரின் சோக முகங்கள் எனப் பல சந்தோஷமான விஷயங்கள்.

உண்மையில் நம்மைப் பற்றியும் நம் நாட்டைப் பற்றியும் பயங்கரமாக, கொடூரமாகப் பீற்றிக் கொள்ளும் நாம், உண்மையில் அப்படித்தானா என மறுபரிசீலனை செய்ய வேண்டிய தருணம் இது எனலாம்.

சுமார் 40 நாட்களாகப் பரவிக் கொண்டிருக்கும் வியாதி, அவ்வளவு தீவிரமாகப் பரவவில்லை என்பது ஒரு ஆறுதல்.  உண்மையில் தமிழ் நாட்டையும், இந்தியாவையும் பொறுத்தவரை மிகச் சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  இன்னும் திட்டமிட்டபடி செய்திருந்தால் வெகு சிறப்பாக இருந்திருக்கும்.

இருந்தாலும், இந்த ஊரடங்கில் என்ன கூத்துகள் எல்லாம் நடக்கிறது என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டி இருக்கிறது.

முதலில், ஊரடங்கின் நோக்கம் என்ன? ஊரடங்கின் போதான நடவடிக்கைகள் அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதாக உள்ளதா என்று பார்த்தல் அவசியம்.

நோக்கம்

மக்கள் நடமாட்டம், பரவல் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதன் மூலம் நோய் தொற்றைக் குறைத்தல் என்று சொல்லலாம்.

உதாரணமாக ரேஷன் கடை கூட்டங்கள்.  ஒரு கடைக்கு ஆயிரம் ரேஷன் கார்டுகள் என்றால், ஆயிரம் பேர் ஒரு கடையைத் தேடி வருவதை விட, நான்கு பணியாளர்கள் ஆயிரம் வீடுகளைத் தேடிப் போனால் நன்றாக இருக்கும்.  நடைமுறையில் இது சாத்தியமே.

இறைச்சிக் கூடத்திலிருந்து தான் வைரஸ் பரவி இருக்கும் என்று சொல்லப்படுவது உண்மையாகக் கூட இருக்கலாம்.  முதலில் இறைச்சிக் கடைகளை அல்லவா மூடி இருக்க வேண்டும். நம் நாட்டில் எனக்குத் தெரிந்து 100% அசைவம் மட்டும் உண்பவர்கள் இல்லை.  இந்த லட்சணத்தில் வீடு வீடாக மீன் விற்க அரசு ஏற்பாடு செய்கிறதாம்.

கைகளை அடிக்கடி கழுவினால் நல்லது என்பன போன்ற விஷயங்கள், கையைக் கழுவினால் கரோனா போய் விடும், அல்லது வராது போன்ற மனப்பான்மையை பாமர மக்களிடம் வளர்க்கிறது.  பிரதான சாலைகளில் கிருமி நாசினி என்று கண்ட கெமிக்கல்களையும் ஸ்பிரே செய்கிறார்கள், அந்த வாகனங்கள் புக முடியாத தெருக்கள் சந்துகளில் அரை குறையாக பணியாளர்கள் மூலம் மருந்தடிக்கிறார்கள்.  இதனால் எந்த பயனும் இல்லை என்று சாதாரணமாக சிந்தித்தாலே புரியும்.

தனி மனித சுகாதாரமும், பொது சுகாதாரமும், பாதுகாப்பு உணர்வும் மட்டுமே இந்த நோய்த் தொற்றைத் தடுக்க பெருமளவில் உதவும்.  இந்தக் கருத்தினை நமது பாமர மக்களின் மனதில் பதித்து புரிய வைக்க சுமார் பத்து வருடமாவது ஆகும்!!!  இது நிதர்சனமான உண்மை.

சுமார் நாற்பது வருடமாக பெட்டிக்கடை வைத்திருக்கும் ஒரு பெரியவரிடம் போன வாரம் ஒரு சிறுவன் பலூன் கேட்டான்.  அவர் பலூனில் ஓட்டை இருக்கிறதா என ஊதிப் பார்த்து, அதில் ஓட்டை இருக்கிறது என்றவுடன் அந்த ஓட்டை பலூனை தொங்கிய அதே பலூன் பாக்கெட்டில் போட்டு விட்டு இன்னொன்றை ஊதிப் பார்த்து ஓட்டை இல்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டு அந்த சிறுவனிடம் கொடுத்தார்.

ஒரு கிராமம், பத்து நாள் முன்பு ஒரு வீட்டில் துக்கம், பதினோராம் நாள் காரியம், சவரம் செய்ய வேண்டும்.  நாவிதரை தாமதமாக அழைத்து வந்தார்கள்.  அக்கம் பக்கத்தில் கடைகள் கிடையாது.  ஒரு பிளேடு தான் இருந்தது.  ஐந்து பேருக்கு ஒரே பிளேடில் சவரம் செய்தவரை அங்கிருந்தவர்கள் மெச்சிக் கொண்டார்களாம்.

கிருமி நாசினி சுரங்கப்பாதை என்று ஒன்றை பெரியதாக கண்டு பிடித்தார்கள்.  அதனால் எந்த பிரயோசனமும் இல்லை.  அப்புறம் அதையெல்லாம் தூக்கி விட்டார்கள், இதெல்லாம் முட்டாள்தனமாக இல்லையா?

இப்பேர்ப்பட்ட சூழலில் கூட யோசிக்காமல் செயல்படும் இவர்களுக்கு பாடம் நடத்த பத்து வருடம் கூடப் போதாது.

20/04/2020

கரோனா

Filed under: பொது — கிருமி @ 3:28 pm

ரொம்ப நாளாகி விட்டது எழுதி.

சரி நேரா விஷயத்துக்கு வந்துட வேண்டியது தான்.

இந்த கரோனா விஷயத்தை பார்த்தா குசு விட்டவன் கதை விடுற மாதிரி இருக்கு. அவன் தான் முதல்ல மூக்கை பிடிப்பான், நாறுதேம்பான். அதே மாதிரி சீனாக்காரனும் கத சொல்றான்.

Create a free website or blog at WordPress.com.