கிருமி

29/03/2008

சிங்கப்பூரில் சிதம்பரம்

Filed under: அரசியல் — கிருமி @ 10:04 பிப

சிங்கப்பூரில் மார்ச் 26 இல் ப.சிதம்பரம் நிக‌ழ்த்திய ஒரு உரை :

சர்வதேச அளவிலான விலைவாசி உயர்வுக்கு வளரும் நாடுகளின் குறிப்பாக அமெரிக்காவின் தவறான அணுகுமுறையே காரணம்.

அமெரிக்காவில் தயாராகும் சோளத்தில் 20 சதவீதம் வரை உயிரி எரிபொருள் தயாரிப்புக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. உணவு தானியத்தை எரிபொருளாக மாற்றும் முட்டாள்தனமான நடவடிக்கையை ஒரு மிகப் பெரிய நாடு செய்வதை எப்படி ஏற்க முடியும்?.

வீட்டுக் கடனைத் திரும்ப வசூலிக்காததால், அமெரிக்க வங்கிகள் திவாலாகும் சூழல் ஏற்பட்டு “சப் பிரைம்’ நெருக்கடி ஏற்படக் காரணமானது. இது அனைத்து நாடுகளின் பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது என்றும் சிதம்பரம் கூறினார். வீட்டுக் கடனை வசூலிக்க அமெரிக்காவில் சட்டம் வலுவாக இல்லை என்பதையே காட்டுகிறது. வளரும் நாடுகளில் இந்த நிலை ஏற்பட்டிருந்தால் அந்நாடு திவாலாகியிருக்கும்.

வளர்ந்த நாடு இத்தகைய தவறை செய்ததால், அதுபற்றி நாம் விவாதிக்கவே தயங்குகிறோம். கேழ்வரகு, கோதுமை உள்ளிட்ட பொருள்களின் விலை கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.

மேலும் பெட்ரோலியப் பொருள்களின் விலையேற்றம் பிற பொருள்களின் விலை உயர்வுக்குக் காரணமாக அமைந்து விட்டது.

நூறாயிரமாவது ஆண்டில் (மில்லினியம் கோல்) எட்ட வேண்டிய இலக்கு குறித்து எவரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. வறுமையை முற்றிலுமாக ஒழிக்கவேண்டும் என்ற இலக்கு எட்ட போதிய நடவடிக்கைகளை எந்த நாடும் எடுக்கவில்லை.

சர்வதேச பொருளாதாரத்தில் தேக்க நிலை தோன்றுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இதனால் பல நாடுகளின் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் ஏற்பட்ட தேக்க நிலை, பணவீக்கம் ஆகியன வளர்ச்சியடையும் நாடுகளின் பொருளாதாரத்தை வெகுவாகப் பாதிக்கும் காரணிகளாகும்.

இதைக் கருத்தில் கொண்டு உள்நாட்டில் பொருள்களுக்கான தேவையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் உள்நாடு மற்றும் அன்னிய முதலீட்டை ஊக்குவிக்க பங்குச் சந்தையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தியாவில் வலுவான பொருளாதாரத்தை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சிதம்பரம் கூறினார்.

கொஞ்சம் யோசியுங்கள்…..

இன்று நமக்குத் தேவை கட்டுபடியாகிற விலையில் பொருட்கள் அவ்வளவு தான், காரணங்கள் அல்ல. பள்ளிக்கு தாமதமாக வரும் மாணவன் ஆசிரியரிடம் ஏதேதோ சாக்குப் போக்கு சொல்வது போல் தான் நமது அரசியல்வாதிகள் பேசுகிறார்களே தவிர, உருப்படியாக எதுவும் செய்வதில்லை.

அமெரிக்காவில் விளையும் மக்காச்சோளத்தில் 20% அல்லது 90% சதவீதம் எரிபொருள் உற்பத்திக்கு பயன்படுத்துவது அமெரிக்காவின் இஷ்டம். தான் வைத்ததே சட்டம் என்று எல்லா விஷயங்களிலும் நடந்து கொள்ளும் அமெரிக்காவுக்கு புத்திமதி சொல்வதா நம் வேலை.

விவசாயத்தை முதுகெலும்பாகக் கொண்ட நாடுதானே நாம்…. நமக்குத் தேவை சோளம் எனில் நாமே விளைவித்துக் கொள்ளலாமே? ஏன் அமெரிக்காவையோ மற்ற நாடுகளையோ சார்ந்திருக்க வேண்டும். தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டுவதேன்? அவர்களின் பொருளாதாரம் சரியில்லை எனில் அது அவர்களின் பிரச்சினை. அதற்காக நாம் ஏன் அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்க வேண்டியிருக்கிறது? இந்த விலைவாசி உயர்வுக்குக் காரணாம் உலக மயமாக்கல், தாராள மயமாக்கல் எனில் அப்படிப்பட்ட ஒரு மயமாக்கலில் நாம் ஐக்கியமாக வேண்டியதன் அவசியம் என்ன?

முழுதும் அன்னிய நாடுகளைச் சார்ந்தே நமது இன்றைய பொருளாதாரம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

சுதந்திரம் அடைந்ததிலிருந்து ஒரு கோஷம் தீனமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது பாரதத்தில்…. உணவு உற்பத்தியில் தன்னிறைவு என்று…..

கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் தெரியும் நாம் எல்லாவற்றுக்கும் எப்படி மற்ற நாடுகளிடம் கையேந்திக் கொண்டு நிற்கிறோம் என்று.

விவசாயத்தையே உயிராகக் கொண்ட நமது நாட்டின் நிலைமையைக் கொஞ்சம் பாருங்கள்

அரிசி எப்போதும் பற்றாக்குறைதான். கோதுமை, எண்ணெய் பற்றி சொல்லவே தேவையில்லை லட்சக்கணக்கான டன்கள் இறக்குமதி செய்தும் பஞ்சப்பாட்டு தான்.

விதைகளும் உரங்களும் கூட இறக்குமதி செய்யப்படுகின்றன. இதை விட வேறெதுவும் கேவலம் இருக்க முடியுமா என்ன? பெரும்பாலான‌ இற‌க்கும‌தி விதைகள் மகசூல் கொடுத்தாலும் விளையும் பொருட்களை விதையாக‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌ முடியாது. அவ‌ற்றை விதைத்தாலும் முளைக்காது. நெல் விதையை வாங்கி விதைத்து விளைச்ச‌ல் எடுத்தாலும் விளைந்த‌ நெல்லை விதைத்தால் முளைக்காது. உயிரிய‌ல் தொழில் நுட்ப‌த்தில் அதையெல்லாம் க‌ட்டுப்ப‌டுத்தி விட்டார்க‌ள். மீண்டும் வாங்கிய‌ இட‌த்தில் விதை நெல் வாங்க‌ வேண்டும், அல்லது வேறு வழியைப் பார்க்க வேண்டும். போதாக்குறைக்கு இவற்றையெல்லாம் உபயோகித்தால் நிலமே பாழாகிவிடும் அபாயம் வேறு.

கணிப்பொறித் துறையில் நம்மவர்கள் கொடிகட்டிப் பறக்கிறார்களாம். கணிப்பொறிக்கான சர்க்யூட்டுகள் வடிவமைப்பானது (சர்க்யூட் டிசைனிங்) இந்தியாவிலேயே மிகப் பெருமளவு நடைபெறுகிறது என்று சொல்லப்படுகிறது. ஆனால் இங்கு கணிப்பொறி தயாரிக்கப்படுவதில்லை. ஒரு சில பொருட்களைத் தவிர கிட்டத்தட்ட அனைத்து கணினி பாகங்களும் இறக்குமதி ஆகின்றன. அல்ல‌து இற‌க்கும‌தியான‌ பாக‌ங்க‌ள் இங்கு ஒருங்கிணைக்க‌ப்ப‌ட்டு விற்க‌ப்ப‌டுகின்ற‌ன‌, அவ்வ‌ள‌வே.

கணினித் துறையில் சிறந்து விளங்கும் நம் மென்பொருள் ஜாம்பவான்கள் இது வரை மைக்ரோசாப்டின் விண்டோஸுக்கு மாற்றாக ஏதேனும் ஒரு ஆபரேட்டிங் சிஸ்டத்தை உருவாக்கி இருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. அதற்குரிய முயற்சிகள் கூட பெரிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை. மைக்ரோசாப்டுக்கு மென்பொருளுக்கான லைசென்ஸ் பணம் மட்டும் பல்லாயிரக்கணக்கான கோடிகள் அளவில் ஆண்டுதோறும் பட்டுவாடா செய்யப்படுகிறது. (திடீரென மைக்ரோசாப்ட் திவாலாகி சேவைகள் நிறுத்தப்பட்டால் தெரியும் சேதி) மைக்ரோசாப்ட், ஏற்P, SஆP ஆகியவை தான் இங்கு கோலோச்சுகின்றன‌. வேறெந்த‌ புதிய‌ மென்பொருளையும் எழுதி ப‌ரிசோதித்துப் பார்க்க‌ ந‌ம்ம‌வ‌ர்க‌ளுக்குத் துப்பில்லை. ஆனால் ஏற்றும‌திக்கு ம‌ட்டும் ட‌ன் க‌ண‌க்கில் மென்பொருள் தயார் செய்வார்க‌ள் இவ‌ர்க‌ள்.

இந்த இறக்குமதி ப‌ட்டிய‌ல் சிமெண்ட், காகிதம், மின்னணு பொருட்கள், மருந்து பொருட்கள், ம‌ருத்துவ‌ உப‌க‌ர‌ணங்கள், அனைத்து வகை எந்திரங்கள், ஆணுறைகள், குழ‌ந்தைக‌ளுக்கான‌ விளையாட்டுப் பொருட்க‌ள், தொலைத்தொட‌ர்பு சாத‌ன‌ங்க‌ள், ஆட‌ம்ப‌ர‌ப் பொருட்க‌ள், கார், போர் விமானங்கள், கப்பல்கள், துப்பாக்கிகள், குண்டுகள், சாராயம், வாஸ்து பொருட்கள், பெங்சுயி சாத்திரம் (இதில் வாஸ்து மீன் வேறு), மார்பிள், டைல்கள் என‌ அறுதியிட‌ முடியாத‌ அள‌வு நீள்கிற‌து.

சில‌ ஆண்டுக‌ளுக்கு முன்பே வினாய‌க‌ர் ச‌துர்த்தி பூஜைக்கென‌ ல‌ட்ச‌க்க‌ண‌க்கில் வினாய‌க‌ர் சிலைக‌ள் சீனாவிலிருந்து இற‌க்கும‌தி செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌.

ஆறேழு ஆண்டுகளுக்கு முன்பு சீன‌ப் ப‌ட்டாசுக‌ள் இங்கு இற‌க்கும‌தி செய்ய‌ப்ப‌ட்டு விற்கப்பட்டது. அப்போது இவற்றை சிவகாசிக்காரர்கள் எதிர்த்தார்கள், வியாபாரம் படுத்து விடும் என்று. சென்ற ஆண்டு சீனப் பட்டாசுகளை இற‌க்கும‌தி செய்து ஒரு சிவகாசி க‌ம்பெனி விற்ற‌து. இவ‌ர்க‌ளுக்கு எந்த‌ பிர‌ச்சினையுமில்லை. இன்று ப‌ட்டாசு த‌யாரிப்பாளர்க‌ள், நாளைய‌ இற‌க்கும‌தி ம‌ற்றும் விற்ப‌னை த‌ர‌க‌ர்க‌ளாக‌ செய‌ல்ப‌டுவார்க‌ள். கால‌த்திற்கேற்ப‌ மாறிக் கொள்வார்க‌ள். ஆனால் தொழிலாள‌ர்க‌ளின் க‌தி?

எதற்கும் அயல் நாட்டு பொருட்களுடன் நம் பொருட்களின் விலையையும் தரத்தையும் ஒப்பிட்டு பார்த்து வாங்கும் போக்கு அதிகரித்து விட்டதே இதற்கு காரணம். சீனன் ஒரு பொருளை பாதி விலைக்கு கொடுக்கிறான் என்றால் அதற்கு பல காரணங்கள் இருக்கும். மிகக் குறைந்த மின்சார விலை, தொழிலாளர் சம்பளம் குறைவு, கட்டுப்படுத்தப்பட்ட பொருளாதாரம் போன்ற பலவிதமான காரணங்கள் இருக்கும்.

இங்கு பொருட்க‌ளை வாங்கும் போது கூட‌ அதில் ஒரு சீட்டு ஒட்டியிருக்கும், “எக்ஸ்போர்ட் குவாலிட்டி” என்று. அதாவ‌து, வெளி நாடுக‌ளுக்கு அனுப்ப‌ப்ப‌டும் அள‌வு தரமானதாம் அப்பொருள். எனில், இங்கு விற்க‌ப்ப‌டும் சாதார‌ண‌ பொருள் என்றால், இந்திய‌னுக்காக த‌யாரிக்க‌ப்ப‌ட்ட‌து என்றால்
– அவ்வ‌ள‌வு கேவ‌ல‌மா?

ரொம்ப கொடுமை என்னவென்றால் ராணுவ தளவாடங்கள் பெருமளவு இறக்குமதி செய்யப்படுகின்றன. இதில் ஊழல் வேறு நடக்கிறது. ஹெலிகாப்டர்கள், போர்க்கப்பல்கள் போன்றவை கூட அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளிலிருந்தும், தகவல் பரிமாற்ற தொழில் நுட்பம் இஸ்ரேலிடமிருந்தும் இறக்குமதி செய்யப்படுகின்றன. இவர்கள் எல்லாம் எப்படிப்பட்ட எம்டன்கள் என்று உலகுக்கே தெரியும். நமது பாதுகாப்பு ரகசியங்கள் அந்த கருவிகள் மூலம் நேரடியாக அவர்களையே சென்றடையும் வசதியை அவர்கள் அதிலேயே பொருத்த வாய்ப்பிருப்பதை மறுக்க முடியுமா? அமெரிக்காவிலிருந்து இற‌க்கும‌தி செய்ய‌ப்ப‌ட்ட‌ எத்த‌னை ராணுவ‌ ஹெலிகாப்ட‌ர்க‌ள் விபத்துக்குள்ளாகியுள்ள‌ன‌, எத்த‌னை ராணுவ‌ அதிகாரிக‌ள் ப‌லியாகியுள்ள‌ன‌ர் என்ப‌தெல்லாம் வெளிச்ச‌த்துக்கு வ‌ராத‌ விஷய‌ங்க‌ள். இது போன்ற சம்பவங்களின் பின்னணியில் ஏதேனும் ச‌தி இருந்த‌தா, கோளாறுக‌ள் த‌ற்செய‌லாக‌ ஏற்ப‌ட்ட‌வையா அல்ல‌து த‌யாரிப்பிலேயே ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌வையா என்ப‌தெல்லாம் புல‌னாய்வு செய்ய‌ப்ப‌ட்ட‌னவா என்றால் அதுவும் இல்லை.

ராணுவ‌ த‌க‌வ‌ல் தொழில் நுட்ப‌ உத‌விக்காக‌ இப்போது இஸ்ரேலிட‌ம் உற‌வாடுகிறது ந‌ம் தேச‌ம். அமெரிக்க‌ இஸ்ரேலிய உறவின் பின்புலமும் அந்த உறவின் பலமும் உல‌க‌றிந்த‌ விஷ‌ய‌ம்.

எல்லாவற்றையும் வெளி நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்து கொண்டிருந்தால்…. இங்கு விலைவாசி, வேலையில்லாத் திண்டாட்டம், அதன் பின்விளைவுகளான கொலை, கொள்ளை, சூது, முதலாளித்துவம் ஆகியவை அதிகரித்து விட்டமையே இதற்கு சாட்சி.

ஆன்லைனில் எண்ணெய், பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களும் தங்கம், வெள்ளி, இரும்பு போன்றவையும் விற்று வாங்கப்பட்டு சூதாடப்படுகின்றன. பெரும் பண முதலைகளும் அரசியல்வாதிகளும் இதில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். விளைவு? நுகர் பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுள்ளது.

பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வால் அனைத்துப் பொருட்களும் விலை உயர்ந்து விட்டது என்று ப.சிதம்பரம் சொல்கிறார். நியாயமாக அரசு என்ன செய்திருக்க வேண்டும்? பெட்ரோலிய எரிபொருட்களுக்கு பதிலாக மாற்று எரிபொருள் பற்றி தொலை நோக்குடன் சிந்தித்திருக்க வேண்டும். மாற்று எரிபொருள் கண்டுபிடிக்கவும் ஏதாவது முயற்சி செய்யப்பட்டிருக்க வேண்டும். மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை ஊக்குவித்திருக்க வேண்டும். ஆனால் இவர்கள் செய்வதென்ன? கார், மோட்டார் சைக்கிள்களுக்கு வரி குறைப்பு செய்து அரசின் வருவாயையும் குறைத்து, பெட்ரோலியப் பொருட்களின் நுகர்வையும் அதிகரித்து மேலும் மேலும் சிக்கலை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். பெட்ரோலியப் பொருட்களின் நுகர்வு அதிகரிப்பதால் என்ன ஆகிறது? அரசு பெட்ரோலியப் பொருட்களுக்கு வழங்கும் மானியத்திற்காக‌ (பெட்ரோலியம் சப்சிடி) பல நூறு கோடிகள் அரசு கஜானாவிலிருந்து உறிஞ்சப்படுகின்றன. வரிக் குறைப்பில் வருவாய் இழப்பு, மானிய வகையில் கையிருப்பிலிருந்தே பெரும் இழப்பு.

இவற்றுக்கெல்லாம் ஒரே வழி, அனைத்து துறைகளிலும் தன்னிறைவை எட்டுவது ஒன்றையே லட்சியமாகக் கொண்டு செயல்படுவது தான். எதற்கும் எவரையும் எதிர்பார்க்காமல் அமைதியாக ஜப்பான் சாதித்தது போல் சாதிப்பது ஒன்றே வழி. நமது அரசியல்வாதிகள் ஹார்வ‌ர்டு ப‌ல்க‌லையில் போய் ப‌டித்து விட்டு இங்கு வ‌ந்து மில்லிய‌ன், பில்லிய‌ன், டால‌ர், சென்செக்ஸ், குளோப‌ல் எகானமி, ச‌ப் பிரைம் கிரைசிஸ், புல் பிய‌ர் என்றெல்லாம் பீலா விட்டுக் கொண்டிருந்தால் ஆப்பிரிக்க நாடுகள் போல பெரிய அளவில் உள் நாட்டு பிரச்சினைகளை சந்திக்க வேண்டியதிருக்கும்.

************

Advertisements

18/03/2008

மரண வியாபாரிகள்

Filed under: அரசியல் — கிருமி @ 3:29 பிப

மரண வியாபாரிகள்

சில வாரங்கள் முன்பு குமரி மாவட்ட மீனவர் ஒருவர் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த போது நஷ்ட ஈடாக தமிழக அரசு ரூபாய் ஐந்து லட்சம் வழங்கியது. இச்சம்பவம் நடந்து சில வாரங்களில் ராமேஸ்வரம் மீனவர் ஒருவர் உயிரிழந்த போது முதலில் நஷ்ட ஈடாக ரூபாய் ஒரு லட்சம் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு எழுந்தது. பின்னர் ஈட்டுத்தொகை ஐந்து லட்சமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டது.

கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் நமது அரசுகள் எவ்வளவு தூரம் திட்டமிடலின்றி மனம் போன போக்கில் செயல்படுகின்றன என்று தெரியும். ஒவ்வொரு முறை இது போன்ற துயர சம்பவங்கள் நடைபெறும் போதும் ஈட்டுத் தொகை அறிவிப்பானது மக்களிடம் பெயர் வாங்க உதவும் அறிவிப்பாகவும் அரசாளும் கட்சியின் தாராளத்தைப் பறை சாற்றும் முரசாகவுமே உபயோகிக்கப்படுகின்றது புரியும். ஈட்டுத்தொகை அறிவிப்பானது சம்பவத்திற்கு சம்பவம் வேறுபடுகிறது. பேருந்து, சாலை, புகைவண்டி, விமான, தொழிற்சாலை விபத்துக்கள், இதர விபத்துக்கள் தீவிரவாத செயல்களில் பலியாவோரின் குடும்பத்தினருக்கும் ஈட்டுத்தொகை வழங்கப்படுவதில் ஒவ்வொரு நாளும் ஒரு தொகை அறிவிக்கப்படுகிறது. இது பெரும்பாலும் சம்பவத்தின் அளவையும் தாக்கத்தையும் பொறுத்தே அமைகிறது. சம்பவமானது மாநில அளவிலோ, தேசிய அளவிலோ உலக குறிப்பிடத்தக்க வகையில் கவனத்தை ஈர்க்கும்படி அமைந்துவிட்டால் போதும்….. அறிவிப்புகள் அள்ளி வீசப்படும். லட்சக்கணக்கில் ஈட்டுத்தொகை, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, குடியிருக்க வீடு என்று மனம் போன போக்கில் கர்ண பிரபு போல அறிவிப்பார்கள்.

அமெரிக்காவில் கொரிய மாணவனால் சுட்டுக் கொல்லப்பட்ட பேராசிரியர் லோகனாதனின் இறுதிச்சடங்கு அமெரிக்காவிலேயே நடந்த போது அவரது உறவினர்கள் பலரது பயணச் செலவையும் தமிழக அரசே ஏற்றுக் கொண்டது, அவர்களுக்கு அமெரிக்கா செல்ல விசாவையும் அரசே சிரமேலிட்ட வேலையாய் ஏற்று வாங்கித் தந்து வழியனுப்பியது. ஆனால் சிவகாசியில் பட்டாசுத் தொழிற்சாலைகளில் அடையாளம் தெரியாமல் அடிக்கடி கருகும் உயிர்களுக்கு அளிக்கப்படும் விலை ஒன்று அல்லது இரண்டு லட்சங்களுக்குள்ளேதான் உள்ளது. பேராசிரியருக்கும் பட்டாசு தொழிலாளிக்கும் ஏன் இந்த பாகுபாடு, மரணத்தில் கூட.

வளைகுடா நாடுகளுக்குப் போய் விபத்திலும், முதலாளிக் கொடுமையிலும் உயிரிழக்கும் மக்களின் பெரும்பகுதி சொத்தே அவர்களின் உடலை இங்கு கொண்டு வர ஆகும் செலவில் கரைந்து விடுகிறதே. எத்தனை தொழிலாளிகளின் உடல்கள் வளைகுடா மருத்துவமனைப் பிணவறைகளில் கேட்பாரின்றிக் கிடக்கின்றன….. அமெரிக்க வாழ் பேராசிரியர் லோகனாதனுக்கு ஒரு சட்டம், துபாய் சித்தாளுக்கு ஒரு சட்டமா?

ஊடகங்கள் பரபரப்புக்காக எதையும் ஊதிப் பெரிதுபடுத்தத் தயங்குவதில்லை.

சில நாட்கள் முன்பு திருச்சியைச் சேர்ந்த பெண் ஒருவர் அமெரிக்காவில் வரதட்சணைக் கொடுமைக்கு ஆளாகி ஓடும் காரிலிருந்து தள்ளி விடப்பட்டு, காயமடைந்து, கோமா நிலைக்குப் போய் அங்கிருந்து இந்தியா கொண்டு வரப்பட்டார். இதற்கு நமது பத்திரிக்கைகள் கொடுத்த முக்கியத்துவத்தை பார்க்க வேண்டுமே….. பக்கம் பக்கமாக புகைப்படத்துடன் எழுதித் தள்ளி விட்டார்கள், தொலைக்காட்சியும் சளைக்கவில்லை. அமெரிக்கப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை……. என்று ரகளை செய்து விட்டார்கள். அதென்ன அமெரிக்கப் பெண்…… திருச்சியிலிருந்து போனவர் தானே திரும்பி வந்திருக்கிறார்.

சிறிதும் விவரம் தெரியாத, தமது உரிமைகள் என்னவென்றே தெரியாத பாமரர்களின் குடும்பம் தான் சீரழியும். கஞ்சிக்குப் போராடும் அன்றாடங்காய்ச்சிகள் வீட்டிலும் இது போலத்தான் நடக்கிறது. அங்கெல்லாம் ஊடகங்கள் நுழைவதில்லையே ஏன்?

ச‌ம்ப‌வ‌த்தின் தாக்க‌ம் ஏற்ப‌டுத்தும் அடிப்ப‌டையில் தான் ஈட்டுத் தொகை இங்கு வ‌ழ‌ங்க‌ப்ப‌டுகிற‌து. பத்திரிகை, தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் சம்பவத்தை வெளிச்சம் போட்டு விளம்பரப்படுத்தி விட்டால் பாதிக்கப்பட்ட குடும்பம் அதிகம் சிரமப்படத் தேவை இருக்காது. அதிகாரிகளே வீடு தேடி வந்து பெயருக்கு ஆறுதல் கூறி ஈட்டுத்தொகை காசோலை விவகாரம் வரை பார்த்துக் கொள்கின்றனர். சில நேரம் இழப்பீட்டுத் தொகைக் காசோலையை கைகளில் கொடுத்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து விட்டும் செல்கின்றனர்.

எல்லா மனித உயிர்களும் சமம் தானே. ஏன் இப்படி பாரபட்சம் காட்டப்படுகிறது? பணம் படைத்தவன், படித்தவனுக்கு மட்டும் ஏன் இந்த சலுகை மரண ஈட்டில்? ப‌ண‌ம் ப‌டைத்த‌வ‌னும் ப‌டித்த‌வ‌னும் விமான‌ விப‌த்திலோ அன்னிய நாட்டிலோ சாகும் போது ஏன் இந்த‌ அள‌வு க‌ரிச‌ன‌ம் காட்ட‌ப்ப‌டுகிற‌து? அவ‌ன் பிழைப்புக்கு தேச‌ம் விட்டு தேச‌ம் போகிற‌வ‌ன் தானே? இதே அளவு கரிசனம் ப‌னை ம‌ர‌த்திலேறி விழுந்து உயிரிழ‌ந்த‌ பின் நிராத‌ர‌வாக‌ நிற்கும் அவ‌ன‌து குடும்ப‌த்தின் மீது எப்போதாவ‌து காட்ட‌ப்ப‌ட்டிருக்கிற‌தா? சில‌ ஆயிர‌ங்க‌ள் பிச்சை போல‌ போட‌ப்ப‌டுகிற‌து. அது கைக்கு கிடைக்கும் போது அம்ம‌ர‌ண‌த்துக்குப் பின் அந்த குடும்ப‌ம் ப‌ட்ட‌ க‌ட‌னைத் தீர்க்க‌க் கூட‌ அப்ப‌ண‌ம் போதாது.

இத‌ற்கெல்லாம் என்ன தீர்வு செய்ய‌லாம்?

தேசிய அள‌வில் இது குறித்த‌ விரிவான‌ ச‌ட்ட‌ம் அல்ல‌து ச‌ட்ட‌த்திருத்த‌ம் செய்ய‌ப்ப‌ட‌ வேண்டும்.

இன்னின்ன‌ நிக‌ழ்வுக‌ளுக்கு இவ்வ‌ள‌வு ஈட்டுத்தொகை அளிக்க‌லாம் என்று வ‌ரைய‌றை செய்ய‌ப்ப‌டலாம். இந்த வரையறையானது விசாரணை அதிகாரியின் அறிக்கையின் படி திருத்தப்படலாம். இஷ்டத்திற்கு வரைமுறையின்றி ஈட்டுத்தொகை வழங்குதல் ஒழிக்கப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்டவரின் குடும்ப நிலை, குடும்ப உறுப்பினர்களின் கல்வி அவர்களின் சொத்து ஆகியவை பற்றி முற்றிலும் பரிசீலிக்கப்பட்ட பின்னரே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்டவரின் வீட்டுக்கே சென்று சேவைகள் வழங்கப்பட வேண்டும். (ஒருவர் விபத்தில் இறந்த பின் அவர் வீட்டு உறுப்பினர்கள் படும் தொல்லைகளைக் கண் கொண்டு காண இயலாது. இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ் அது இது என காகிதங்களை தயார் செய்யவே ஒரு மாதம் ஆகிவிடும்)

ம‌ர‌ண‌த்தையும் விள‌ம்ப‌ரமிட்டு புகழாதாய‌ம் தேடும் ந‌மது ஊடகர்கள், மக்கள், அர‌சிய‌ல‌ர்க‌ள் திருந்துவார்களா?

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: