கிருமி

12/05/2020

கரோனாவும் நாமும் – 10

Filed under: கரோனா — கிருமி @ 12:47 pm

பேருந்துகளில் சமூக இடைவெளியை பின்பற்ற இருக்கைகளை அகற்றுகிறார்களாம், ஆந்திராவில். அமரும் இருக்கைப் பகுதியை மட்டும் அகற்ற முடியவில்லையா என்று தெரியவில்லை.

இன்னும் கிருமி நாசினி தெளிக்கிறேன் என்று ஊரெல்லாம் கண்டதையும் ஸ்பிரே பண்ணிக் கொண்டு அலைகிறார்கள்.

வாட்சப், டீவியில் பார்த்தேன். ஒருவன் சாக்கினுள் தும்மி விட்டு சாக்கை மூடிவிட்டு தரையில் அடித்து கிருமிகளைக் கொல்வான்(!). இவர்கள் கிருமி நாசினி ஸ்பிரே செய்வதற்கும், இதற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை.

பேர் பெற்ற முட்டாள்கள் நிறைந்த தமிழகம் அல்லவா இது. கோயம்பேடு வந்தவர்களிடமிருந்து கிருமி பரவுகிறது என்று கோயம்பேடு சந்தையை மூடும் அறிவாளிகள் இவர்கள். இவர்கள் கிருமி நாசினி தெளிப்பு லாஜிக்படி பார்த்தால், ஒரு நாள் சந்தையை மூடி கிருமி  நாசினி தெளித்து விட்டால் கரோனா கிருமிகள் ஒழிந்து சுத்தமாக வேண்டுமே?

ஒரு கான்ஸ்டபிளுக்கு வியாதி வந்தால் காவல் நிலையத்தினை மூடுகிறார்கள். ஒரு நகராட்சி ஊழியருக்கு வியாதியாம், நகராட்சி அலுவலகத்தினை மூடுகிறார்கள். அங்கிருக்கும் கிருமிகள் சாப்பாடு தண்ணீர் இல்லாமல் செத்து விடும் என்று நினைக்கிறார்கள் போல.

இவர்களுக்கு எதைப் பற்றியும் அடிப்படைப் புரிதல் இல்லை, அவ்வளவுதான். வீடுகளுக்குள் அடிக்கடி நம் கைகள் படும் இடங்களை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டுமாம். இதெல்லாம் பொதுவான சுகாதார வழி முறை, இதற்கும் இப்போது இயங்கும் வியாதிக்கும் எந்த சம்பந்தமும் இருக்கவியலாது. சாப்பாட்டில் ஒரு மூடி டெட்டால் ஊற்றி சாப்பிடச் சொல்லி சொன்னாலும் சொல்வார்கள், இதுல பெரியவங்களுக்கு ஒரு மூடி, குழந்தைகளுக்கு அரை மூடி, பச்சிளம் குழந்தைகளுக்கு ஐந்து மில்லி என்று கணக்கு சொன்னாலும் சொல்வார்கள்.

மக்களுக்கு நல்லது செய்கிறேன் என்று பல கோமாளித்தனங்கள் செய்கிறார்கள். ஏ.சி. வசதி உள்ள கடைகளை திறக்கக் கூடாது என்று முதலில் உத்தரவு போட்டார்கள். ஏசி பயன்படுத்தாமல் வியாபாரம் செய்யலாம் என்று கூட யோசிக்காத அரசு அதிகாரிகள் இருக்கிறார்களே. ஏதோ ஆண்டவன் புண்ணியத்தில் மக்கள் வாழ்கிறோம், அவ்வளவுதான்.

அரசு அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பெரிய ஈகோ பிரச்சினை ஒன்று உண்டு. ஏதாவது நலத்திட்டம், இலவசம் வழங்கினால் அதை அவர்கள் கையால் தொட்டுக் கொடுத்தால் தான் அவர்களுக்கு திருப்தி. இந்த வியாதி சூழலில் பொருட்களை வரிசையாக வைத்து பயனாளிகளை வரிசையாக வந்து எடுத்துக்கொள்ளும்படி செய்தால் என்ன? வேண்டுமென்றால் கொடுப்பவர்கள் பக்கத்தில் நின்று தொலைக்கட்டுமே.

போதாக் குறைக்கு போலீஸ் வேறு சில இடங்களில் அப்படியே சிரிப்பு போலீசாக மாறி விட்டனர். ஊரடங்கின் ஆரம்பத்தில் வெளியே வந்தவர்களிடம் கையெடுத்துக் கும்பிடுதல், காலில் விழுந்து கெஞ்சுதல் போன்றவைகளையெல்லாம் செய்து மக்கள் நெஞ்சில் நீங்காத இடம் பெற்று விட்டனர், என்னத்தை சொல்ல?

08/05/2020

கரோனாவும் நாமும் – 8

Filed under: கரோனா — கிருமி @ 10:48 pm

அமெரிக்காவில் ஒரு நர்ஸ், அமெரிக்க மருத்துவமனைகளில் கரோனாவால் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினரான கறுப்பினத்தவர்கள் கிட்டத்தட்ட கொல்லப்படுவதாக கண்ணீர் மல்க வீடியோவில் தெரிவித்தாராம். அது கண்டிப்பாக நிஜமாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன், குறைந்த பட்சம் அவர் கண்ட சிலவாவது உண்மைகளாகத்தான் இருக்க வேண்டும்.

மனிதாபிமானம், மிருகாபிமானம் என்றெல்லாம் பேசுகிறோம். ஆனால் பலர் இன்னும் நாகரீகம் என்றால் என்னவென்று கூட அறியாமல், அறியவும் விரும்பாமல், தன் இஷ்டப்படி வாழ்வதே கொள்கை என்றும் அதனால் எவர் பாதிக்கப்பட்டாலும், இறந்தாலும் கவலை இல்லை என்ற எண்ணத்துடன் வாழ்கின்றனர். அவர்களின் வெளி மனதில் அந்த எண்ணங்கள் இல்லாவிட்டாலும் ஆழ் மனதில் அந்த எண்ணங்கள் நிச்சயம் இருக்கும். ஓரளவு மனவியல் பற்றி சிந்திப்பவர்கள் இதை அறிவார்கள்.
இதை இந்த கரோனாவிலும் பொருத்திப் பாருங்கள்.

அதிகார போதையும், பண வெறியும் ஒருங்கே சேரும் போது எப்படி யோசிக்கும் என்று அதே பாணியில் யோசித்துப் பாருங்கள் புரியும்.

நான் யோசித்ததில் பளிச்சிட்டவை……..

1. நாமும் நம் குடும்பமும் நன்றாக இருந்தால் போதும். அப்படி இல்லாவிட்டால், நான் மட்டுமாவது நன்றாக இருக்க வேண்டும்.

2. சிறுபான்மை கறுப்பினத்தவரை எனக்குப் பிடிக்காது – அவர்கள் சாவதை நான் விரும்புகிறேன்.

3. கரோனாவினால் செத்து ஒழிபவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழைகள், அடி மத்திய தர வர்க்கம். இவர்களால் தான் நாட்டுக்கு நிதிச்சுமை அதிகம். இவர்கள் சாகச்சாக நாடு வளத்தை நோக்கி முன்னேறும்.

4. ஓய்வூதியதாரர்கள் இறந்தால் இன்னும் நிதிச்சுமை குறையும், அதுவும் குடும்பத்தோடு செத்தால் ரொம்ப நல்லது.

5. இப்படி மக்கள் மொத்தமாக சாகும் போது பெரிய அளவில் யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை. இதே அளவு மக்கள் போராலோ பட்டினியாலோ இறந்தால் பெரும் பிரச்சினை தான்.

6. இந்த வியாதிக்கு எடுக்கப்படும் எந்த நடவடிக்கைக்கும் வியாதியையே காரணம் காட்டலாம்.

7. இந்த நெருக்கடியில், முன்பு விலை குறைவாக இருந்தவை பலவும் இப்போது விலை அதிகரித்தும், விலை அதிகமாக இருந்த சில விலை குறைவாகவும் உள்ளன. இது மாதிரி சந்தர்ப்பங்களை நான் வணிக ரீதியில் பயன்படுத்தி சம்பாதிப்பேன்.

இதற்கு மேல் கொடூரமாக சிந்திக்க முடியவில்லை. பத்து நிமிடம் கொடூரமானவர்கள் மாதிரி சிந்தித்தாலே இப்படி என்றால், கொடூரமானவர்கள் எப்படி சிந்திப்பார்கள்.

06/05/2020

கரோனாவும் நாமும் – 7

/// சென்னை: கொரோனா தொற்றை ஒழிப்பதில் தோல்வியடைந்த அரசுக்கு எதிராக நாளை ( மே 7ம் தேதி ) அவரவர் வீட்டின் முன் கூடி முழக்கமிடுங்கள் என திமுக தலைவர் ஸ்டாலின், கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளார். ///

இது அப்பட்டமாக பிரதமர் மோடியைக் காப்பி அடிக்கும் செயல். பேசாம உருப்படியா வேற ஏதாவது செய்யலாம்.

சில யோசனைகள்.

1. வீட்டு வாசல்ல நின்று கரோனா ஒழிகன்னு கத்தலாம். அப்படியே கரோனா கொடும்பாவி எரிக்கலாம். (புடிக்காத சட்ட நகலை எரிக்கிற மாதிரி) பேப்பர்ல கரோனான்னு எழுதி அதைக் கொளுத்தலாம்.

2. பக்கத்துல இருக்கற ரயில்வே தண்டவாளத்துல போய் தலைய வச்சி படுத்துக்கலாம். வேணும்னா பக்கத்துல கல்லக்குடின்னு ஒரு போர்டு எழுதி வக்சிக்கலாம். கவலையே கிடையாது, ரயில்கள் ஓடலையே.

3. கரோனா திணிப்பு எதிர்ப்பு போராட்டம்னு ஒண்ணு அறிவிச்சிடலாம். இது எப்படி பண்ணலாம்னா, வூட்ல இருக்கற தலையணையை எல்லாம் சாயந்திரம் ஆறு மணிக்கு மேல வெளிய எடுத்துனு வந்து அதுல திணிச்சிருக்கற பஞ்சை எல்லாம் வெளில எடுத்து வீசி சிம்பாலிக்கா எதிர்ப்பைக் காட்டலாம். இதையே இன்னும் தீவிரமா பண்ணனும்னா, மெத்தையில திணிச்சிருக்கறதக் கூட வெளில வீசி போராடலாம். பயங்கரமா இருக்கும். எல்லா ஓட்டும் உங்களுக்கு கிடைச்சி முதல்வராயிடலாம்.

4. ஆட்சிக்கு வந்தால் கரோனாவை ஒழிப்போம்னு இப்பவே வாக்குறுதி கொடுத்துடுங்க. ஒங்க டீவில எல்லாம், உதயசூரியன் உதயமாகும் போது கரோனா கருகி ஒழியிற மாதிரி கிராபிக்ஸ் பண்ணி திரும்பத் திரும்ப ஓட விடுங்க, பாத்துட்டு கரோனா செத்துடும்.

5. ஊரடங்கா இருக்கறதால, நடைப்பயணம் போக முடியாது. அதனால இருந்த இடத்திலேயே மார்ச் பண்ணி நடைப்பயணம் செய்யலாம்.

கரோனாவும் நாமும் – 6

Filed under: கரோனா — கிருமி @ 2:49 pm

டிரம்ப் இனிமேல் கரோனாவுக்கு முக்கியத்துவம் தருவதில்லை என அறிவித்துள்ளாராம். இந்திய அரசிலும், இனிமேல் நாளுக்கு ஒரு முறை தான் புள்ளி விவரம் வெளியிடப் போவதாகத் தெரிவித்துள்ளனர் . மோடியும் இப்போது கரோனா குறித்து மக்களிடம் கெஞ்சுவதை நிறுத்தி விட்டார். கூடிய சீக்கிரம் மக்கள் கரோனாவுக்கு பழகி விடுவார்கள். குளிர் விட்டுப் போகும், அச்சம் விட்டுப் போகும்.

மக்கள் நடமாட்டம் பெருகிக் கொண்டு போகிறது . ஆனால் பெரும்பாலான மக்களிடம் கரோனா குறித்த விழிப்புணர்வு ஏதும் பரவியதாகத் தெரியவில்லை. இவர்களுக்கு விழிப்புணர்வு வருவதற்குரிய அறிகுறிகளே தென்படவில்லை என்பது தான் உண்மை. ஏனென்றால் இவர்களுக்கு சுகாதாரம் பற்றிய அடிப்படைப் புரிதலே இன்னும் இல்லை என்பது கசப்பான உண்மை. எச்சில் தொட்டு காசை எண்ணுவது, டிக்கெட் கொடுப்பது போன்ற பழக்கங்களே இன்னும் மாறவில்லை. உணவுப் பண்டம் விற்கும் கடைக்கு சென்றால், அந்த பொருளை பிளாஸ்டிக் அல்லது காகித கவருக்குள் போடும் முன் கவரை இன்னும் வாயால் ஊதிப் பெரிதாக்கி அதன் பின் தான் அதனுள் போட்டுத் தருகின்றனர். இன்னும் வடை போன்ற பலகாரங்களை வீதியில் திறந்தபடி வைத்து, தெருப்புழுதியையெல்லாம் அப்பித்தான் விற்கிறார்கள். இதையெல்லாம் நம் நாட்டில் பெரும்பான்மை மக்கள் நிறுத்தி நாகரீகமாக வாழ ஆரம்பிக்க இன்னும் சுமார் ஐம்பது ஆண்டுகள் வரை ஆகும் என்பது என் கணிப்பு.

சினிமாக்களில் பிரபலமாகவும் பெருமையாகவும் காட்டப்படும் கிடாவெட்டு விருந்து அடிக்கடி நடக்கும் கோவில்களுக்கு போய் இருக்கிறீர்களா? சாத்தூர் பக்கம் இருக்கங்குடி என்ற ஊர் மாரியம்மன் கோவில், இந்து அற நிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. நாள் தவறாது இங்கு கிடா வெட்டு நடந்து கொண்டே இருக்கும். எளிய மக்களிலிருந்து கோடீஸ்வரர் வரை வந்து நேர்ச்சை செலுத்துவார்கள். ஆனால் அதன் சுற்றுப்புறம் படு கலீஜாக, அருவெருப்பாக இருக்கும். மொட்டை அடித்து விட்டு குளிக்கப்போனால் தண்ணீர் மூன்று இஞ்ச் பைப்பில் பத்துப் பதினைந்து இடங்களில் கொட்டிக் கொண்டே இருக்கும். குளிக்கலாம், நன்றாகத்தான் இருக்கும்.
ஆனால் அதே தண்ணீர் தரையில் அப்படியே ஊறி பூமிக்குள் போகும், அதை போர் மூலம் உறிஞ்சித்தான், எந்த விதமான சுத்திகரிப்பும் இல்லாமல் திரும்ப குடிக்க, குளிக்க பாவிக்கிறார்கள். இந்த கண்றாவிகளைப் பார்த்து விட்டு அசூயைப்பட்ட என்னை, கோவிலுக்கு வந்தால் அதையெல்லாம் பார்க்கக் கூடாது என்று புத்திமதி சொல்லி, அன்று முழுவதும் ஒதுக்கப்பட்டவனைப் போல் ஆக்கிவிட்டார்கள் ஒரு முறை.

அது கோவிலுக்கும் மேலே ஒரு இடம் என்று இவர்களுக்கு ஏன் நினைக்கத் தோன்றவில்லை. அந்தக் கோவிலும், மாரியம்மனும், உடம்பு சரியில்லாதவனுக்கு மருத்துவமனைக்கு மேலே, வேலை தேடுபவனுக்கு முதலாளிக்கு மேலே, கோடீஸ்வரனுக்கு பணத்துக்கும் மேலே, ஒரு புனிதமான இடம் என்று கருதிக் கொள்கிறார்கள். ஆனால் அங்கு சுத்தம் பற்றி யாருக்கும் கவலை இல்லை. ஏன் இப்படி அசுத்தமாக, துர் நாற்றத்துடன் இருக்கிறது என்று கேட்பவன் விரோதி ஆகி விடுகிறான்
பல இடங்களில் இப்படித்தான் இருக்கிறது. மக்களின் மனோ நிலையும் அப்படித்தான் இருக்கிறது. கோடீசுவரனும் இது மாதிரி இடங்களுக்குப் போனால் எதையும் கண்டு கொள்வதில்லை. அவனும் இந்த மாதிரி அசுத்தமான இடங்களில் புழங்குவதை எளிமை என்று கருதிக் கொண்டு அதில் பெருமையும் கொள்கிறான். விதி விலக்காக ஒரு சிலர், கொஞ்சம் காசு செலவு செய்து, நேராக உள்ளே போய் வழிபாடு செய்து விட்டு வேறெங்கும் கால் வைக்காமல் நழுவி விடுவார்கள். இவர்கள் தான் என்னைப் பொறுத்தவரை நல்ல மக்கள்.

04/05/2020

கரோனாவும் நாமும் – 5

Filed under: கரோனா — கிருமி @ 4:01 pm

04-05-2020. இன்றைய செய்திப்படி, தமிழ் நாட்டில் பாதிப்பு மூவாயிரத்து சில்லறையாம். குணமடைந்தவர்கள் போக சிகிச்சை பெற்று வருபவர்கள் 1617 தானாம், இது தமிழ் நாட்டின் மொத்த நிலவரமாம். ஆனால் சென்னையில் அனைத்து அரசு மருத்துவமனைகளும் நிரம்பி விட்டனவாம். புள்ளி விவரங்களை நம் அரசுகள் மாற்றவும் மறைக்கவும் சொல்லியா தர வேண்டும். ஆனால் இதையெல்லாம் மறைப்பதால் மக்களுக்கு அலட்சியம் ஆகி, பாதிப்பு தான் கூடும்.

சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களை பெரிய ஹாலில் இருபது பேர் வரையில் வைத்து சிகிச்சை அளிப்பது சரியான முறையா என்று தெரியவில்லை. ஆனால் கூட்டம் அதிகமானால் இதைத்தவிர வேறு வழியும் இருக்காது. இம்மாதிரி சமயங்களில் உயிர்ப்பலி அதிகமாகலாம். கவனிப்பு இருக்காது, எதிர்பார்க்கவும் முடியாது.

எல்லா இடங்களிலும் ஊரடங்குக்கு முன் இருந்தது போல நெரிசல் ஆரம்பமாகி விட்டது. இறைவன் விட்ட வழி இது தான் போலும்.

எனக்குத் தெரிந்த ஒருவர், மாதம் முப்பதாயிரம் வரை சம்பாதிப்பவர். இந்த நாற்பது நாளில் பிளாக்கில் தினசரி ஒரு குவார்ட்டர் வாங்கிய வகையில் முப்பதாயிரத்துக்கு மேல் செலவு செய்துள்ளாராம்.

வெளி நாடுகளில் இருந்து வேலையின்றி இனி சொந்த நாட்டுக்கு படையெடுக்கப் போகும் மக்களின் நிலை எப்படி இருக்கும்? கஷ்டம் தான். அங்கிருந்து கொண்டு இண்டர்னெட்டில் இந்த நாட்டின் அவலங்களைச் சாடி வந்த கீபோர்டு புலிகளும், செல்போன் சிங்கங்களும், இங்கே வந்து பொங்குகிறார்களா அல்லது முங்குகிறார்களா என்று பார்க்க வேண்டும்.

ஏரோப்ளேனில் ஆஸ்பத்திரிகள் மீது பூ தூவியது, கடற்படையின் வண்ண விளக்கு அலங்காரம், வாண வேடிக்கை போன்ற நிகழ்வுகள் அவசியமா என்று எண்ணிப் பார்க்க வேண்டும். இதெல்லாம் புலியைப் பார்த்து பூனை சூடு போட்ட கதை தான். இந்த மாதிரி ஆடம்பரங்களுக்கு ஆட்பட்ட அமெரிக்கா இப்போது விலையைக் கொடுக்கிறது.

உண்மையில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத் துறையின் பிற ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல் துறையினர் போன்றவர்களின் பணி மகத்தானது. அவர்களை பிற்காலங்களில், பெரும் விழாக்கள் எடுத்து கொண்டாடலாம், பணி உயர்வு, சலுகைகள், சம்பள உயர்வு, அவர்களுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் எதிலாவது சலுகைகள் என்று தரலாம். அதை விட்டு விட்டு இம்மாதிரி பணம், நேரம், பிற துறைகளின் உழைப்பு என அனைத்தையும் ஒருங்கே வீணடிப்பது தேவையற்றது.

03/05/2020

பத்திரிகை சுதந்திரம், தர்மம், பத்திரிகை கயவாளித்தனம், கத்துக்குட்டி பத்திரிகைத்தனம், என்றால் என்ன?

Filed under: பொது — கிருமி @ 9:45 pm

இன்று உலக பத்திரிகை சுதந்திர தினம்.

தினமலர் உள்ளிட்ட அனைத்து முன்னணி, பின்னணி பத்திரிகைகளுக்கும்,  அனைத்து விதமான ஊடகங்களுக்கும் இவை  பொருந்தும்.

கலக்கல், அசத்தல், அதிரடி, பிரேக்கிங் நியூஸ் ஆகிய சில சொற்களை வைத்தே காலத்தை ஓட்டுவது.

சந்திப்பிழை, எழுத்துப்பிழை, இலக்கணப்பிழை, மட்டமான வாக்கிய அமைப்புகள், ஒருமை பன்மை பிழை இவை எல்லாம் இல்லாமல் எதுவும் எழுதவோ பேசவோ கூடாது.

தமிழை வளர்க்க வேண்டும், தமிழ் நம் உயிர், தமிழ் நம் மூச்சு என்று எழுத, பேச வேண்டும். ஆனால் தலைப்புக்கள் எல்லாம் ரவுண்ட் அப், ஸ்பெஷல், எக்ஸ்குளுசிவ், கோர்ட், டீக்கடை பெஞ்சு, கார்ட்டூன்ஸ், டவுட் தனபாலு, டூ மினிட்ஸ் ஷாட்ஸ் என்று தான் இருக்கும்.

கண்டு பிடிப்பு, படைப்பு இரண்டுக்கும் இன்னும் வித்தியாசம் தெரியாமல் கண்டதையும் செய்தியாக போடுவது. பல ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டு இன்று புழக்கத்தில் உள்ள பொருட்களை இங்கு தமிழகத்தில் யாராவது DIY பாணியில் செய்தால், அவரை பெரிய விஞ்சானி ரேஞ்சுக்கு புரமோட் செய்வது.

‘அமெரிக்காவில் தண்ணீர் லிட்டர் நூறு ரூபாய் தெரியுமாக்கும்’ என்கிற ரீதியில் இன்னும் பயணக்கட்டுரை எழுதுவது.

பத்திரிகைகளின் தவறுகளை விமர்சித்து கருத்து எழுதினால் வெளியிடப்படாது.

ஏதாவது தவறு செய்தவராக இருந்தால் சமயத்தில் அவன் இவன் என்று ஏகவசனத்தில் எழுதுவது.

செய்தித்தாளில் ஒரு நிகழ்ச்சி சம்பந்தமாக ஒரு செய்தி வருகிறது என்றால், அந்த நிருபர் கவரில் குறைந்தது ஆயிரமோ இரண்டாயிரமோ வாங்கி இருப்பார். இல்லாமல் செய்தி வராது. உதாரணமாக உங்கள் குடியிருப்பு சங்கம் சார்பில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது என்றால், நீங்கள் காசு கொடுத்தால் மட்டும் தான் மறுநாள் அது செய்தியாக வரும், இல்லா விட்டால் வராது. இது நூறு சதம் உண்மை. இது நாட்டின் எல்லா பிரபல செய்தித் தாள்களுக்கும் பொருந்தும். அரசு அலுவலர்களில் கூட நேர்மையானவரைக் கண்டு பிடித்து விடலாம், ஆனால் இவர்களில் யாரும் அப்படி கிடையாது. இந்த லட்சணத்தில் இவர்கள் நாட்டை திருத்த போராடுகிறார்களாம்.  பேனா முனை வாளை விடக் கூரானது என்று வசனம் வேறு பேசிக் கொள்வார்கள்.

எந்த விதமான ஆதாரங்களும் இல்லாமல், வதந்திகளையே செய்திகளாக வெளியிடுவது.  விளம்பரங்களையே செய்திகள் போல வெளியிடுவது – உதாரணம் மருத்துவத் துறை செய்திகள் எல்லாம் இந்த ரகம் தான்.

ஒரு பெரிய நிறுவனம், ஹோட்டல், கல்லூரி என ஏதாவதில் ஏதாவது தப்புத் தண்டா, ரெய்டு, விபத்து எனக் குற்றம் ஏதாவது நடந்து விட்டால் அந்த நிறுவனப் பெயரைப் பிரசுரிக்கவே மாட்டார்கள் – காரணம் உங்களுக்கே தெரியும்.  இது பத்திரிகை தர்மத்தின் அடிப்படை.

முசுலிம், கிறித்தவர் சம்பந்தப்பட்ட பெரும்பாலான செய்திகளில் சம்பந்தப்பட்டவர்களின் பெயரைப் போடுவதில்லை.  ஏனென்றால் சிறுபான்மையினரின் காலை நக்கியாவது பிழைக்க வேண்டுமே.

இவற்றையெல்லாம் பத்திரிகை சுதந்திரம், பத்திரிகை தர்மம், கத்துக்குட்டி பத்திரிகைத்தனம் பத்திரிகை கயவாளித்தனம் என்று எப்படிச் சொன்னாலும் சரி.

இதையும் மீறி நடு நிலை நாளேடு ஏதாவது உண்டு என்று நீங்கள் நம்பிக்கொண்டு இருந்தால் நீங்கள் பாவம்.

Next Page »

Blog at WordPress.com.