கிருமி

04/05/2020

கரோனாவும் நாமும் – 5

Filed under: கரோனா — கிருமி @ 4:01 pm

04-05-2020. இன்றைய செய்திப்படி, தமிழ் நாட்டில் பாதிப்பு மூவாயிரத்து சில்லறையாம். குணமடைந்தவர்கள் போக சிகிச்சை பெற்று வருபவர்கள் 1617 தானாம், இது தமிழ் நாட்டின் மொத்த நிலவரமாம். ஆனால் சென்னையில் அனைத்து அரசு மருத்துவமனைகளும் நிரம்பி விட்டனவாம். புள்ளி விவரங்களை நம் அரசுகள் மாற்றவும் மறைக்கவும் சொல்லியா தர வேண்டும். ஆனால் இதையெல்லாம் மறைப்பதால் மக்களுக்கு அலட்சியம் ஆகி, பாதிப்பு தான் கூடும்.

சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களை பெரிய ஹாலில் இருபது பேர் வரையில் வைத்து சிகிச்சை அளிப்பது சரியான முறையா என்று தெரியவில்லை. ஆனால் கூட்டம் அதிகமானால் இதைத்தவிர வேறு வழியும் இருக்காது. இம்மாதிரி சமயங்களில் உயிர்ப்பலி அதிகமாகலாம். கவனிப்பு இருக்காது, எதிர்பார்க்கவும் முடியாது.

எல்லா இடங்களிலும் ஊரடங்குக்கு முன் இருந்தது போல நெரிசல் ஆரம்பமாகி விட்டது. இறைவன் விட்ட வழி இது தான் போலும்.

எனக்குத் தெரிந்த ஒருவர், மாதம் முப்பதாயிரம் வரை சம்பாதிப்பவர். இந்த நாற்பது நாளில் பிளாக்கில் தினசரி ஒரு குவார்ட்டர் வாங்கிய வகையில் முப்பதாயிரத்துக்கு மேல் செலவு செய்துள்ளாராம்.

வெளி நாடுகளில் இருந்து வேலையின்றி இனி சொந்த நாட்டுக்கு படையெடுக்கப் போகும் மக்களின் நிலை எப்படி இருக்கும்? கஷ்டம் தான். அங்கிருந்து கொண்டு இண்டர்னெட்டில் இந்த நாட்டின் அவலங்களைச் சாடி வந்த கீபோர்டு புலிகளும், செல்போன் சிங்கங்களும், இங்கே வந்து பொங்குகிறார்களா அல்லது முங்குகிறார்களா என்று பார்க்க வேண்டும்.

ஏரோப்ளேனில் ஆஸ்பத்திரிகள் மீது பூ தூவியது, கடற்படையின் வண்ண விளக்கு அலங்காரம், வாண வேடிக்கை போன்ற நிகழ்வுகள் அவசியமா என்று எண்ணிப் பார்க்க வேண்டும். இதெல்லாம் புலியைப் பார்த்து பூனை சூடு போட்ட கதை தான். இந்த மாதிரி ஆடம்பரங்களுக்கு ஆட்பட்ட அமெரிக்கா இப்போது விலையைக் கொடுக்கிறது.

உண்மையில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத் துறையின் பிற ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல் துறையினர் போன்றவர்களின் பணி மகத்தானது. அவர்களை பிற்காலங்களில், பெரும் விழாக்கள் எடுத்து கொண்டாடலாம், பணி உயர்வு, சலுகைகள், சம்பள உயர்வு, அவர்களுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் எதிலாவது சலுகைகள் என்று தரலாம். அதை விட்டு விட்டு இம்மாதிரி பணம், நேரம், பிற துறைகளின் உழைப்பு என அனைத்தையும் ஒருங்கே வீணடிப்பது தேவையற்றது.

Leave a Comment »

No comments yet.

RSS feed for comments on this post. TrackBack URI

தமிழில் மறுமொழி இடவும். தமிழில் உரையாடுவோம், எழுதுவோம். நன்றி.

Create a free website or blog at WordPress.com.