கிருமி

06/05/2020

கரோனாவும் நாமும் – 6

Filed under: கரோனா — கிருமி @ 2:49 pm

டிரம்ப் இனிமேல் கரோனாவுக்கு முக்கியத்துவம் தருவதில்லை என அறிவித்துள்ளாராம். இந்திய அரசிலும், இனிமேல் நாளுக்கு ஒரு முறை தான் புள்ளி விவரம் வெளியிடப் போவதாகத் தெரிவித்துள்ளனர் . மோடியும் இப்போது கரோனா குறித்து மக்களிடம் கெஞ்சுவதை நிறுத்தி விட்டார். கூடிய சீக்கிரம் மக்கள் கரோனாவுக்கு பழகி விடுவார்கள். குளிர் விட்டுப் போகும், அச்சம் விட்டுப் போகும்.

மக்கள் நடமாட்டம் பெருகிக் கொண்டு போகிறது . ஆனால் பெரும்பாலான மக்களிடம் கரோனா குறித்த விழிப்புணர்வு ஏதும் பரவியதாகத் தெரியவில்லை. இவர்களுக்கு விழிப்புணர்வு வருவதற்குரிய அறிகுறிகளே தென்படவில்லை என்பது தான் உண்மை. ஏனென்றால் இவர்களுக்கு சுகாதாரம் பற்றிய அடிப்படைப் புரிதலே இன்னும் இல்லை என்பது கசப்பான உண்மை. எச்சில் தொட்டு காசை எண்ணுவது, டிக்கெட் கொடுப்பது போன்ற பழக்கங்களே இன்னும் மாறவில்லை. உணவுப் பண்டம் விற்கும் கடைக்கு சென்றால், அந்த பொருளை பிளாஸ்டிக் அல்லது காகித கவருக்குள் போடும் முன் கவரை இன்னும் வாயால் ஊதிப் பெரிதாக்கி அதன் பின் தான் அதனுள் போட்டுத் தருகின்றனர். இன்னும் வடை போன்ற பலகாரங்களை வீதியில் திறந்தபடி வைத்து, தெருப்புழுதியையெல்லாம் அப்பித்தான் விற்கிறார்கள். இதையெல்லாம் நம் நாட்டில் பெரும்பான்மை மக்கள் நிறுத்தி நாகரீகமாக வாழ ஆரம்பிக்க இன்னும் சுமார் ஐம்பது ஆண்டுகள் வரை ஆகும் என்பது என் கணிப்பு.

சினிமாக்களில் பிரபலமாகவும் பெருமையாகவும் காட்டப்படும் கிடாவெட்டு விருந்து அடிக்கடி நடக்கும் கோவில்களுக்கு போய் இருக்கிறீர்களா? சாத்தூர் பக்கம் இருக்கங்குடி என்ற ஊர் மாரியம்மன் கோவில், இந்து அற நிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. நாள் தவறாது இங்கு கிடா வெட்டு நடந்து கொண்டே இருக்கும். எளிய மக்களிலிருந்து கோடீஸ்வரர் வரை வந்து நேர்ச்சை செலுத்துவார்கள். ஆனால் அதன் சுற்றுப்புறம் படு கலீஜாக, அருவெருப்பாக இருக்கும். மொட்டை அடித்து விட்டு குளிக்கப்போனால் தண்ணீர் மூன்று இஞ்ச் பைப்பில் பத்துப் பதினைந்து இடங்களில் கொட்டிக் கொண்டே இருக்கும். குளிக்கலாம், நன்றாகத்தான் இருக்கும்.
ஆனால் அதே தண்ணீர் தரையில் அப்படியே ஊறி பூமிக்குள் போகும், அதை போர் மூலம் உறிஞ்சித்தான், எந்த விதமான சுத்திகரிப்பும் இல்லாமல் திரும்ப குடிக்க, குளிக்க பாவிக்கிறார்கள். இந்த கண்றாவிகளைப் பார்த்து விட்டு அசூயைப்பட்ட என்னை, கோவிலுக்கு வந்தால் அதையெல்லாம் பார்க்கக் கூடாது என்று புத்திமதி சொல்லி, அன்று முழுவதும் ஒதுக்கப்பட்டவனைப் போல் ஆக்கிவிட்டார்கள் ஒரு முறை.

அது கோவிலுக்கும் மேலே ஒரு இடம் என்று இவர்களுக்கு ஏன் நினைக்கத் தோன்றவில்லை. அந்தக் கோவிலும், மாரியம்மனும், உடம்பு சரியில்லாதவனுக்கு மருத்துவமனைக்கு மேலே, வேலை தேடுபவனுக்கு முதலாளிக்கு மேலே, கோடீஸ்வரனுக்கு பணத்துக்கும் மேலே, ஒரு புனிதமான இடம் என்று கருதிக் கொள்கிறார்கள். ஆனால் அங்கு சுத்தம் பற்றி யாருக்கும் கவலை இல்லை. ஏன் இப்படி அசுத்தமாக, துர் நாற்றத்துடன் இருக்கிறது என்று கேட்பவன் விரோதி ஆகி விடுகிறான்
பல இடங்களில் இப்படித்தான் இருக்கிறது. மக்களின் மனோ நிலையும் அப்படித்தான் இருக்கிறது. கோடீசுவரனும் இது மாதிரி இடங்களுக்குப் போனால் எதையும் கண்டு கொள்வதில்லை. அவனும் இந்த மாதிரி அசுத்தமான இடங்களில் புழங்குவதை எளிமை என்று கருதிக் கொண்டு அதில் பெருமையும் கொள்கிறான். விதி விலக்காக ஒரு சிலர், கொஞ்சம் காசு செலவு செய்து, நேராக உள்ளே போய் வழிபாடு செய்து விட்டு வேறெங்கும் கால் வைக்காமல் நழுவி விடுவார்கள். இவர்கள் தான் என்னைப் பொறுத்தவரை நல்ல மக்கள்.

Leave a Comment »

No comments yet.

RSS feed for comments on this post. TrackBack URI

தமிழில் மறுமொழி இடவும். தமிழில் உரையாடுவோம், எழுதுவோம். நன்றி.

Create a free website or blog at WordPress.com.