கிருமி

12/05/2020

கரோனாவும் நாமும் – 10

Filed under: கரோனா — கிருமி @ 12:47 pm

பேருந்துகளில் சமூக இடைவெளியை பின்பற்ற இருக்கைகளை அகற்றுகிறார்களாம், ஆந்திராவில். அமரும் இருக்கைப் பகுதியை மட்டும் அகற்ற முடியவில்லையா என்று தெரியவில்லை.

இன்னும் கிருமி நாசினி தெளிக்கிறேன் என்று ஊரெல்லாம் கண்டதையும் ஸ்பிரே பண்ணிக் கொண்டு அலைகிறார்கள்.

வாட்சப், டீவியில் பார்த்தேன். ஒருவன் சாக்கினுள் தும்மி விட்டு சாக்கை மூடிவிட்டு தரையில் அடித்து கிருமிகளைக் கொல்வான்(!). இவர்கள் கிருமி நாசினி ஸ்பிரே செய்வதற்கும், இதற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை.

பேர் பெற்ற முட்டாள்கள் நிறைந்த தமிழகம் அல்லவா இது. கோயம்பேடு வந்தவர்களிடமிருந்து கிருமி பரவுகிறது என்று கோயம்பேடு சந்தையை மூடும் அறிவாளிகள் இவர்கள். இவர்கள் கிருமி நாசினி தெளிப்பு லாஜிக்படி பார்த்தால், ஒரு நாள் சந்தையை மூடி கிருமி  நாசினி தெளித்து விட்டால் கரோனா கிருமிகள் ஒழிந்து சுத்தமாக வேண்டுமே?

ஒரு கான்ஸ்டபிளுக்கு வியாதி வந்தால் காவல் நிலையத்தினை மூடுகிறார்கள். ஒரு நகராட்சி ஊழியருக்கு வியாதியாம், நகராட்சி அலுவலகத்தினை மூடுகிறார்கள். அங்கிருக்கும் கிருமிகள் சாப்பாடு தண்ணீர் இல்லாமல் செத்து விடும் என்று நினைக்கிறார்கள் போல.

இவர்களுக்கு எதைப் பற்றியும் அடிப்படைப் புரிதல் இல்லை, அவ்வளவுதான். வீடுகளுக்குள் அடிக்கடி நம் கைகள் படும் இடங்களை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டுமாம். இதெல்லாம் பொதுவான சுகாதார வழி முறை, இதற்கும் இப்போது இயங்கும் வியாதிக்கும் எந்த சம்பந்தமும் இருக்கவியலாது. சாப்பாட்டில் ஒரு மூடி டெட்டால் ஊற்றி சாப்பிடச் சொல்லி சொன்னாலும் சொல்வார்கள், இதுல பெரியவங்களுக்கு ஒரு மூடி, குழந்தைகளுக்கு அரை மூடி, பச்சிளம் குழந்தைகளுக்கு ஐந்து மில்லி என்று கணக்கு சொன்னாலும் சொல்வார்கள்.

மக்களுக்கு நல்லது செய்கிறேன் என்று பல கோமாளித்தனங்கள் செய்கிறார்கள். ஏ.சி. வசதி உள்ள கடைகளை திறக்கக் கூடாது என்று முதலில் உத்தரவு போட்டார்கள். ஏசி பயன்படுத்தாமல் வியாபாரம் செய்யலாம் என்று கூட யோசிக்காத அரசு அதிகாரிகள் இருக்கிறார்களே. ஏதோ ஆண்டவன் புண்ணியத்தில் மக்கள் வாழ்கிறோம், அவ்வளவுதான்.

அரசு அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பெரிய ஈகோ பிரச்சினை ஒன்று உண்டு. ஏதாவது நலத்திட்டம், இலவசம் வழங்கினால் அதை அவர்கள் கையால் தொட்டுக் கொடுத்தால் தான் அவர்களுக்கு திருப்தி. இந்த வியாதி சூழலில் பொருட்களை வரிசையாக வைத்து பயனாளிகளை வரிசையாக வந்து எடுத்துக்கொள்ளும்படி செய்தால் என்ன? வேண்டுமென்றால் கொடுப்பவர்கள் பக்கத்தில் நின்று தொலைக்கட்டுமே.

போதாக் குறைக்கு போலீஸ் வேறு சில இடங்களில் அப்படியே சிரிப்பு போலீசாக மாறி விட்டனர். ஊரடங்கின் ஆரம்பத்தில் வெளியே வந்தவர்களிடம் கையெடுத்துக் கும்பிடுதல், காலில் விழுந்து கெஞ்சுதல் போன்றவைகளையெல்லாம் செய்து மக்கள் நெஞ்சில் நீங்காத இடம் பெற்று விட்டனர், என்னத்தை சொல்ல?

Leave a Comment »

No comments yet.

RSS feed for comments on this post. TrackBack URI

தமிழில் மறுமொழி இடவும். தமிழில் உரையாடுவோம், எழுதுவோம். நன்றி.

Blog at WordPress.com.